கரோனா தடுப்பு நடவடிக்கை; தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஹர்ஷ்வர்தன்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஹர்ஷ்வர்தன்.
Updated on
1 min read

கரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று (ஜன.08) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"கரோனா தடுப்பூசி ஒத்திகையை மேற்பார்வையிட இன்று சென்னை வந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் தடுப்பூசி மையங்களைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தினைத் தொடங்குவதற்கான பணிகள் மிகவும் திருப்தி அளிப்பதாகக் கூறினார்.

ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கோவிட் தொற்றுக்குப் பிந்தைய தொடர் சிகிச்சை மையத்தினைப் பார்வையிட்டு அங்கு மருத்துவ மாணவர்களால் அமைக்கப்பட்டுள்ள கோவிட் குறித்த விழிப்புணர்வு நிகழ்வினையும் பார்வையிட்டார்.

ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தின் சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டார். பின்னர் அங்கு நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட கோவிட் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்த காணொலியைப் பார்த்தார். சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசு மருந்துக் கிடங்கில் தடுப்பூசிகளைப் பாதுகாப்பாக வைத்திருக்கத் தேவையான இடவசதி மற்றும் குளிர்பதன வசதி ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

மேலும், இந்தியாவிலேயே 100 விழுக்காடு ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதைப் பாராட்டினார். தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக குறுகிய காலத்தில் கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட படுக்கை வசதிகள், அமைக்கப்பட்ட ஆய்வகங்கள், புதியதாக நியமிக்கப்பட்ட பணியாளர்கள், கூடுதலான ஆக்சிஜன் வசதிகள் ஆகியவை மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதாகத் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறையை வெகுவாகப் பாராட்டினார்.

மேலும், கோவிட் தடுப்பூசி திட்டத்திற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அமைக்கப்பட்டுள்ள குளிர்பதன வசதிகள் முழுமையாக மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

மேலும், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்து தமிழ்நாட்டில் கோவிட் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் சிறப்பாகச் செயல்படுத்தியமைக்காக தனது பாராட்டுகளை நேரில் தெரிவித்தார்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in