

நடப்பாண்டு பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, மண் பானைகள் தயாரிப்பைத் தொழிலாளர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் விற்பனை ஆகவில்லை.
கடந்த காலங்களில் பொதுமக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்த மண் சார்ந்த பொருட்களில், மண்பானைக்கு முக்கிய இடம் உண்டு. சமையலுக்கு, உணவுப் பொருட்களைச் சேகரித்து வைக்க, குடிநீர் பிடித்து வைக்க, ஆலயம் சார்ந்த பயன்பாடுகளுக்கு எனப் பலவிதப் பயன்பாடுகளுக்கு வீடுகள், நிறுவனங்கள், கோயில்களில் மண்பானைகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன.
அதுதவிர, முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான பொங்கல் பண்டிகை சமயத்தில், மண்பானைகளில் பொங்கல் செய்து, சூரிய பகவானை வழிபடும் வழக்கம் நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எளிதில் உடையாத, கெட்டியான, தாங்கும் திறன் கொண்ட, பல வடிவப் பித்தளை, எவர்சில்வர், அலுமினியப் பாத்திரங்களின் வரவுக்குப் பின்னர் மண்பானைகளின் பயன்பாடு குறைந்துவிட்டது.
தயாரிப்பு தீவிரம்
தற்போதைய காலச்சூழலில், அத்தியாவசியத் தேவைகளுக்கு மண்பானைகள் பயன்படுத்தப்படுவது குறைந்தாலும், பொங்கல் பண்டிகை சமயத்தில், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தக் கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் மண்பானைகள் குறிப்பிட்ட சதவீதம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், பொங்கல் பண்டிகை சமயத்தில் பல்வேறு அளவுகளில் மண்பானைகள் அதிக அளவில் தயாரிக்கப்படும். விற்பனையும் அதற்கேற்ப இருக்கும். அதன்படி நடப்பாண்டும் பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி, மண்பானைகள் தயாரிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானைகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்படுகின்றன.
ஆனால் மண்பானை தயாரிப்பு, விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறும்போது, ''கரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, பணத் தட்டுப்பாடு, குறைந்து வரும் பயன்பாடு போன்றவற்றின் காரணமாக, நடப்பு ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை தற்போது இல்லை. அதேசமயம், பண்டிகைக்கு இன்னும் நாட்கள் இருப்பதால் இறுதிக் கட்டத்தில் விற்பனை தீவிரமடையும் என எதிர்பார்க்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளனர்.
8 லட்சம் பேர்
இது தொடர்பாகத் தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர் (குலாலர்) சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் எல்.ஐ.சி. மருதாசலம் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ''அன்றாட வாழ்வியிலில் மண்பானைப் பயன்பாடு குறைந்தாலும், தற்போதும் அதற்குத் தேவை உள்ளது. மண்பானைத் தொழிலை நம்பி மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 8 லட்சம் குடும்பத்தினரும், கோவையில் பல ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் உள்ளனர்.
மண்பானை விற்பனையில் மட்டும் கோவையில் 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். கோவை, விழுப்புரம், மதுரை, மானாமதுரை, திருக்கோவிலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மண்பானைத் தயாரிப்பாளர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்கள், தற்போதைய காலத் தேவைக்கேற்ப, மண் சார்ந்த பலவிதப் பொருட்களைத் தயாரித்தாலும், மண்பானைத் தயாரிப்பே இவர்களின் முக்கியத் தொழிலாக உள்ளது.
பொங்கல் பண்டிகை சமயத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்ப ஒரு லிட்டர் கொள்ளளவு, 3 லிட்டர், 5 அல்லது 7 லிட்டர் கொள்ளளவு என வெவ்வேறு கொள்ளளவுகளில் மண்பானைகள் தயாரிக்கப்படுகின்றன. அதற்கு வண்ணங்களும் பூசப்படுகின்றன. அதன் அளவுகளுக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.100 முதல் அதிகபட்சம் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மண்பானை செய்வது ஒரு கலை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒரு செட் பானை செய்வதற்குக் குறைந்தபட்சம் 6 மணி நேரம் தேவை. அவற்றை வேக வைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்குக் குறைந்தபட்சம் 2 நாட்களாகும். களிமண், வண்டல் மண் கலவையைக் கலந்து, கசடுகளை அகற்றி, திருவியில் வைத்துத் திருவி, பானை தயாரிக்கப்படும். பின்னர் காய வைத்து, சூளையில் வேகவைத்து மீண்டும் காய வைக்கப்பட்டால் மண்பானை தயார்.
பொதுமக்களுக்குக் கோரிக்கை
வழக்கமாகப் பொங்கல் பண்டிகை நெருங்க, நெருங்க ஆயிரக்கணக்கில் மண்பானைகள் விற்றுவிடும். இறுதிக்கட்டத்தில் விற்பனை தீவிரமாக இருக்கும். கோவையில், ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகை சமயத்தில், வழக்கமாகச் சிறிய பானைகள் ஏறத்தாழ 7 முதல் 8 ஆயிரம் எண்ணிக்கையிலும், பெரிய பானைகள் ஆயிரம் முதல் 2 ஆயிரம் எண்ணிக்கையிலும் விற்றுவிடும். ஆனால், நடப்பாண்டுப் பானைகள் தயாரிப்பு தீவிரமாக இருந்தாலும், எதிர்பார்த்த அளவுக்கு இன்னும் விற்பனை ஆகவில்லை. இது இத்தொழிலை மட்டுமே நம்பியுள்ள தொழிலாளர்களுக்குப் பெரிய இழப்பாகிறது.
இத்தொழிலை நம்பியுள்ள மக்களுக்கு உதவிடும் வகையில், ரேஷன் கடைகளில் பொங்கல் பொருட்கள் விநியோகிக்கப்படும்போது, கூடுதலாக மண்பானைகளையும் விநியோகிக்க வேண்டும். இதன் மூலம் இத்தொழிலை நம்பியுள்ள மக்களுக்கு வாழ்வாதாரம் பெருக ஒரு வாய்ப்பு கிடைக்கும் என அரசிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அரசிடம் இருந்து எந்த ஓர் அறிவிப்பும் இல்லை. இத்தொழிலை நம்பியுள்ள வியாபாரிகளுக்கு உதவிடும் வகையில், பொதுமக்கள் பொங்கல் பண்டிகை சமயங்களில் மண்பானைகளை வாங்கிப் பொங்கல் வைக்க முன்வர வேண்டும்'' என்று மருதாசலம் தெரிவித்தார்.