Last Updated : 08 Jan, 2021 06:21 PM

 

Published : 08 Jan 2021 06:21 PM
Last Updated : 08 Jan 2021 06:21 PM

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கைக் கடற்படையால் தஞ்சாவூர் மீனவர்கள் 3 பேர் கைது

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஆவணத்தைச் சேர்ந்த அஸ்வத் புருக்கானுதீன் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப் படகில், நாகை மாவட்டம் காடம்பாடியைச் சேர்ந்த முருகையன் மகன் சக்திவேல் (30), பனங்குடியைச் சேர்ந்த ராஜா மகன் பாலமுருகன் (32), நாகூரைச் சேர்ந்த துாண்டிக்கரன் மகன் மணிபாலன் (32) ஆகிய மூவரும், தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் கள்ளிவயல் தோட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த 5-ம் தேதி மாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில், கடந்த 6-ம் தேதி மாலை அவர்கள் கரை திரும்பி இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் வரவில்லை.

இதற்கிடையில், நேற்று (ஜன.07) மாலை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடலோரக் காவல் படையினர், யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி தொண்டைமனாறு கடற்பரப்பில் மூவரையும் கைது செய்து, படகையும் பறிமுதல் செய்து காங்கேசன் துறைமுக கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தமிழக மீன்வளத்துறைக்கும், இந்தியக் கடலோரக் காவல் படையினருக்கும் இலங்கை அரசால் தெரிவிக்கப்பட்டது.

மணிபாலன், பாலமுருகன், சக்திவேல்

இதுகுறித்து, தமிழ்நாடு மீனவர் பேரவை பொதுச் செயலாளர் மல்லிப்பட்டினம் ஏ.தாஜூதீன் கூறுகையில், "நாட்டுப் படகு மீனவர்கள் இலங்கைப் பகுதிக்குச் சென்று மீன் பிடிக்க வாய்ப்பில்லை. இந்திய எல்லையில் மீன்பிடித்தபோது, காற்றில் திசை மாறியிருக்கலாம். தற்போது பிடிபட்ட படகையும், மீனவர்களையும் இலங்கை அரசாங்கம் மன்னித்து விடுவிக்க வேண்டும்.

இதேபோல், இலங்கை அரசால் ஏற்கெனவே பிடித்து வைக்கப்பட்டுள்ள 129 படகுகளை விடுவித்து, மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். இரு நாட்டு மீனவர்களும் சுமுகமான முறையில், எல்லைப் பிரச்சினை இன்றி கடலில் மீன்பிடிக்க இருநாட்டு அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலோரக் காவலர்களாக மீனவர்கள் செயல்படும் நிலையில், மத்திய அரசு பல்வேறு துறைகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மீனவர்களுக்கும் அளிக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x