

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 5 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. முதல் கட்டமாக அனைத்து மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
கரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை தமிழகத்தில் நடந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, பத்மநாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை, செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வட்டவிளை அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், நாகர்கோவில் ஜெயசேகரன் மருத்துவமனை ஆகிய 5 மையங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.
வட்டவிளை அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த தடுப்பூசி ஒத்திகையைக் குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் ஒவ்வொரு மையங்களிலும் 25 சுகாதார அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடையாள அட்டை, வாக்காளர் அட்டையுடன் உள்ளே சென்ற அவர்களைச் சரிபார்த்த பின்புதான், கோவிட்-19 தடுப்பூசி போடப்படுகிறது. அவர்களை அரை மணி நேரம் கண்காணித்த பின்னர் 2-வது கட்டமாக சோதனை செய்யப்படுகிறது. இது ஒரு ஒத்திகை மட்டும்தான். தடுப்பூசி ஒத்திகைப் பணியில் ஈடுபடும் அனைவருக்கும் தேவையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து 4 கட்டங்களாகத் தடுப்பூசிப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக அனைத்து மருத்துவ, சுகாதாரப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாகக் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் முன்களப் பணியாளர்களுக்கும், மூன்றாம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்ட கால நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், நான்காம் கட்டமாக அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் சம்பந்தப்பட்ட எவ்வித பாதிப்பும் இல்லை. பறவைக் காய்ச்சல் வந்தாலும் அவற்றைத் தடுக்க அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன'' என்று ஆட்சியர் மா.அரவிந்த் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜா, மாநகர நல அலுவலர் கின்சால், மருத்துவர் உமாராணி, அலுவலர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர்.
வட்டவிளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சியைக் குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.