Last Updated : 08 Jan, 2021 05:11 PM

 

Published : 08 Jan 2021 05:11 PM
Last Updated : 08 Jan 2021 05:11 PM

அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கா? 40க்கும் மேலான தொகுதிகளா?- எல்.முருகன் பேட்டி

மதுரை

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை ரஜினி ஆதரித்தால் வரவேற்போம் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாஜக சார்பில் நாளையும், நாளை மறுநாளும் ‘நம்ம ஊர் பொங்கல் விழா’ கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்கத் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் இன்று மதுரை வந்தார்.

அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நடிகர் ரஜினிகாந்த் தேசியம், ஆன்மிகம் மீது அதிகப் பற்று கொண்டவர். பாஜக தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாகக் கொண்ட கட்சி. இதனால் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ரஜினி ஆதரவு அளித்தால் வரவேற்போம்.

தேர்தலுக்கு பாஜக தயாராகி வருகிறது. பூத் அளவில் கட்சியைப் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. வேல் யாத்திரையின்போது பாஜவின் கோரிக்கையை ஏற்றுத் தைப்பூசத்துக்கு முதல்வர் பொது விடுமுறை அறிவித்துள்ளார். இதற்காகத் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து இப்போது பேச முடியாது. தேர்தல் முடிந்த பிறகு பார்க்கலாம். அஞ்சல் துறைத் தேர்வில் மத்திய அரசு ஏற்கெனவே அளித்த உறுதிப்படி விரைவில் தமிழ் மொழி சேர்க்கப்படும்.

இந்திய அணுமின் நிலையங்களில் கல்பாக்கமும் ஒன்று. அதன் தலைமையிடம் மும்பையில் உள்ளது. இதனால் மும்பையில் பணித் தேர்வு நடைபெறுவது இயல்பானது. இதைத் தவறாகப் பார்க்கக் கூடாது. தமிழகத்திலும் பணித் தேர்வு நடத்த வேண்டும் எனக் கோரலாம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜன. 13-ல் சென்னைக்கு வருவது குறித்து அதிகாரபூர்வத் தகவல் இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்துக் கட்சியின் தேசியத் தலைமை முடிவு செய்யும்.

பாஜக சிறுபான்மையினருக்கு எதிரி என மு.க.ஸ்டாலின் தவறாகப் பேசி வருகிறார். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவில் ஆர்வத்துடன் சேர்கின்றனர். பாஜக நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்வதாக சிறுபான்மையினர் கருதுகின்றனர்.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 40-க்கும் அதிக தொகுதிகள் கேட்டு நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படுவது வெறும் ஊகம்தான். அந்த ஊகங்களுக்குப் பதிலளிக்க முடியாது. தேர்தல் நேரத்தில்தான் தொகுதி குறித்து முடிவு செய்யப்படும்''.

இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் எல்.முருகனை, மாநில பாஜக பொதுச் செயலர் ஸ்ரீநிவாசன், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் கே.கே.சீனிவாசன், துணைத் தலைவர் ஹரிகரன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x