

தூத்துக்குடி மாவட்டத்தில் 10 இடங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம் இன்று நடைபெற்றது.
கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பு மருந்துகளுக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து விரைவில் பொதுமக்களுக்குக் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட உள்ளன்.
இந்தத் தடுப்பூசிகளை மக்களுக்குப் போடுவதற்கு முன்பாக, தடுப்பூசி போடும்போது நேரிடும் நடைமுறைச் சிக்கல்களைக் கண்டறிந்து களைவதற்காக நாடு முழுவதும் ஒத்திகை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் முதல்கட்ட ஒத்திகை கடந்த 2-ம் தேதி தமிழகத்தில் 17 இடங்களில் நடைபெற்றது. இந்நிலையில், 2-ம் கட்ட ஒத்திகை பல்வேறு மாவட்டங்களில் இன்று நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்செந்தூர் அரசு மருத்துவமனை, புதுக்கோட்டை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், முள்ளக்காடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், தூத்துக்குடி அற்புதம் தனியார் மருத்துவமனை ஆகிய 5 இடங்களிலும், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் கோவில்பட்டி மாவட்டத் தலைமை மருத்துவமனை, கீழஈரால் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், புதூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், கேரில்பட்டி ஸ்ரீராம் நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலை.ம், கமலா மாரியம்மாள் தனியார் மருத்துவமனை ஆகிய 5 இடங்களிலும் இந்த முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகை முகாமில் மாவட்டச் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கிருஷ்ணலீலா, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி பாலன், உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, மருத்துவக் கண்காணிப்பாளர் பாவலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஒத்திகையின்போது, போதுமான காற்றோட்டமான இடவசதி, இணைய இணைப்பு, மின்சாரம், பாதுகாப்பு போன்றவற்றுக்கான அனைத்து ஏற்பாடுகளும் எவ்வாறு உள்ளன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஒத்திகைக்கு வந்த முன்களப் பணியாளர்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், அவா்களின் அடையாள அட்டைகள் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து, ஐந்து, ஐந்து பேராக உள்ளே அனுப்பப்பட்டனர். அவர்களது விவரங்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. பின்னர், கண்காணிப்பு அறையில் 30 நிமிட ஓய்வுக்குப் பிறகு, அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர். ஒவ்வொரு மையத்திலும் 25 பேர் என மொத்தம் 250 பேர் இந்த ஒத்திகையில் கலந்து கொண்டனர்.