

மொழி தான் ஒரு இனத்தின் அடையாளம், மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பது சமுதாயத்தின் கடமை என, இந்துக்குழும வெளியீட்டு நிறுவன இயக்குநர் என்.ராம் வலியுறுத்தினார்.
நீலகிரி ஆவண காப்பகம் சார்பில் படுகரின மக்களின் வாழ்வியலை கொண்டு தயாரிக்கப்பட்ட நாட்காட்டி உதகையில் இன்று (ஜன. 08) வெளியிடப்பட்டது. நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் டி.வேணுகோபால் வரவேற்றார்.
விழாவில் பங்கேற்ற நீலகிரி எம்.பி. ஆ.ராசா பேசுகையில், "நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூர்வீக குடிமக்களான படுக சமுதாய மக்களோடு பயணித்துள்ளேன். மரபு, பண்பாட்டு செரிவுமிக்க ஒரு சமுதாயம் படுக சமுதாயம். இந்திய ஒருமைப்பாட்டு கவுன்சிலின் தலைவராக இருந்த சி.பி.ராமசாமி, 'இந்திய கலாச்சார பண்பாடு ஆரிய மற்றும் திராவிட கலாச்சாரங்களை கொண்டு இரு பிரிவுகளாக உள்ளன.
இவை இரண்டும் தான் இந்தியாவின் பண்பாட்டு கூறுகள்' என்றார். திராவிட பண்பாட்டின் தொன்மையான ஒரு இனம் படுகரினம் என்று ஆராய்ச்சி கூறுகிறது. திராவிட கலாச்சாரத்தில் வேற்றுமைகள் இல்லை. ஆண், பெண் சமத்துவம், புரோகிதம் இல்லை, பெண்களுக்கு சம உரிமை உள்ளது.
சட்டவியல் கோட்பாடின் படி இறந்தவர்களுக்கு மூன்று உரிமைகள் உள்ளன. அவை இறந்தவரின் உயிலை நிறைவேற்ற வேண்டும். நாகரீகமாக அடக்கம் செய்ய வேண்டும். இறந்தவர்கள் குறித்து தவறாக பேசக்கூடாது.
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே படுக சமுதாயம் நாகரீகமான அடக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். வரதட்சணை என்பதே இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த சமுதாயத்தை பாதுகாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. என்ற அடிப்படையில் அரசியல்ரீதியாக நடவடிக்கை மேற்கொள்வேன்" என்றார்.
இந்துக்குழும வெளியீட்டு நிறுவன இயக்குநர் என்.ராம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நாட்காட்டியை வெளியிட்டு பேசுகையில், "படுக சமுதாய மக்கள் உபசரிப்பதில் சிறந்தவர்கள். இன்று வெளியிடப்பட்ட நாட்காட்டியில் அவர்களது வாழ்வியல் குறித்த பல தகவல்கள் உள்ளன.
படுகரின மக்கள் பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். படுக சமுதாய மக்களின் கலாச்சாரத்தில் ஆண், பெண் சம உரிமை, வரதட்சணை வாங்காதது ஆகியன பல காலமாக உள்ளன.
மொழி தான் ஒரு இனத்தின் அடையாளம். திராவிட மொழி குடும்பத்தை சேர்ந்தது படுக மொழி. நீலகிரியில் வாழும் படுக சமுதாயம் மற்றும் பிற சமுதாய மக்கள் நல்லிணக்கத்தோடு வாழ்ந்து வருகின்றனர்.
கலாச்சாரம் மிக முக்கியம். மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பது படுக சமுதாயத்தில் உள்ள அனைவரின் கடமையாகும்" என்றார்.
விழாவில் படுக சமுதாய தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை: என்.ராம்
விழாவில் பேசிய 'இந்து' என்.ராம், "இந்துத்துவா கருத்தியல் தமிழ்நாடுக்கு தேவையில்லை. மத்திய அரசு அதிகாரத்தை வைத்து இந்துத்துவாவை திணிக்க முயற்சி செய்கின்றனர். ஆனால், அது தோல்வியில் முடிந்துள்ளது. தமிழகத்தில் அரசியல் மாற்றம் தேவை. அரசியல் நோக்கர்களின் பார்வையில் அரசியல் மாற்றம் ஏற்படும் என்பது. அதிகாரத்துக்கு வரும் தலைவர்கள் இந்துத்துவாவை எதிர்த்துப் போராட வேண்டும்" என்றார்.