

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி, போக்சோ மற்றும் கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்பட்ட 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவில்பட்டி ஜீவா நகரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் மணிகண்டன் (29) மற்றும் கோவில்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்த செல்லபாண்டி மகன் மாரியப்பன் (27) ஆகிய இருவரையும் கடந்த 12.12.2020 அன்று கொலை முயற்சி வழக்கில், கோவில்பட்டி மேற்குக் காவல்நிலையப் போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டி திட்டன்குளத்தைச் சேர்ந்த இருளாண்டி மகன் பாண்டியராஜ் (23). இவரைக் கடந்த 04.12.2020 அன்று 17 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் கோவில்பட்டி கிழக்குக் காவல்நிலையப் போலீஸார் கைது செய்தனர். இதேபோல் விளாத்திகுளம் மீனாட்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முனியசாமி மகன் ராஜா (34). இவரைக் கடந்த 09.12.2020 அன்று சரக்கு ஆட்டோவில் கஞ்சா கடத்தியதாகத் தூத்துக்குடி வடபாகம் காவல்நிலையப் போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க அந்தந்தக் காவல் நிலைய ஆய்வாளர்கள் மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அதன்பேரில் 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
இதனை ஏற்று மணிகண்டன், மாரியப்பன், பாண்டியராஜ், ராஜா ஆகிய 4 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் இன்று உத்தரவிட்டார். அதன்பேரில் 4 பேரும் பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.