புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் செயல்படும் பாரம்பரிய கட்டிடங்களை சீரமைக்க ரூ.6.40 கோடி நிதி ஒதுக்கீடு

Published on

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் செயல்படும் பாரம்பரிய கட்டிடங்களை சீரமைப்பதற்கு ரூ.6.40 கோடி நிதியை பொதுப்பணித் துறை ஒதுக்கீடு செய்துள்ளது.

புதுக்கோட்டை மன்னராட்சி நிர்வாகத்தில் இருந்தபோது கல் சிற்ப வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்ட புதிய அரண்மனையானது தற்போது ஆட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

இந்த பாரம்பரிய கட்டிடமானது தொடர்ந்து பராமரிக்கப்படாததால் பொலிவிழந்து காணப்படுகிறது. இதுபோன்று, மாவட்டத்தில் பிற இடங்களில் அரசு அலுவலகங்கள் செயல்படும் பாரம்பரிய கட்டிடங்களையும் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதையடுத்து, பழமை மாறாமல் சீரமைத்து பாதுகாப்பதற்கு ஆட்சியர் அலுவலகத்துக்கு ரூ.1 கோடியே 46 லட்சத்து 54 ஆயிரமும், திருமயம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.3 கோடியே 43 லட்சத்து 88 ஆயிரமும், ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.97 லட்சத்து 46 ஆயிரமும், கீரனூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு ரூ.52 லட்சத்து 68 ஆயிரம் என மொத்தம் ரூ.6 கோடியே 40 லட்சத்து 56 ஆயிரத்தை பொதுப்பணித் துறை ஒதுக்கி உள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம்
ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம்

இது குறித்து, தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனர் ஏ.மணிகண்டன் கூறியபோது, "மாவட்டத்தின் பாரம்பரிய கட்டிடங்களை சீரமைத்து பாதுகாக்க நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். அதேசமயம், பழமை மாறாமல் சீரமைக்க வேண்டும்.

மணிகண்டன்
மணிகண்டன்

தொல்லியல் துறையிடம் உள்ள நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி சீரமைத்தால் எளிதில் பழமை மாறாமல் பொலிவுபெறச் செய்யலாம்" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in