

ஆன்லைன் கடன் செயலிகளை நடத்தும் சீன பினாமி நிறுவனங்களுக்கு சிம்கார்டு விற்றதாக சென்னையை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் செயலிகளின் தலைமையகமாக பெங்களூருவில் ட்ரூகிண்டில் டெக்னாலஜி என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 சீனர்கள் உட்பட4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, பெங்களூருவில் உள்ள பிரபல தொலைதொடர்பு நிறுவனங்களில் இருந்து இவர்கள் சட்டவிரோதமாக 1,600 சிம் கார்டுகள் வாங்கியதும் சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதில் சென்னையில் இருந்து 1,100 சிம் கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன.
சென்னை குரோம்பேட்டையில் அஸாகஸ் டெக்னோ சொல்யூஷன்ஸ் என்ற சிம் கார்டு விற்பனை நிறுவனம் உள்ளது. இதன் இயக்குநர்கள் மனோஜ்குமார் (30), முத்துக்குமார் (28). முகநூலில் மனோஜ்குமாருக்கு அறிமுகமான ரியா குப்தா என்ற பெண், தனக்கு 1,100 சிம் கார்டுகள் வேண்டும் என்றும், அதை அஸாகஸ் நிறுவனத்தின் பயன்பாட்டுக்கு என்றுகூறி, வாங்கித் தருமாறும் கேட்டுள்ளார்.
அதிக பணம் கொடுத்ததால், மனோஜ்குமாரும் தனது நிறுவனத்தின் பெயரிலேயே சிம் கார்டுகளை வாங்கிக் கொடுக்க, ரியா அவற்றை சீன நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்.
போலி முகவரியில் வாங்கப்பட்ட இந்த சிம் கார்டுகளை வைத்துதான் சீன கடன் செயலி நிறுவனங்கள் பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து மனோஜ்குமார், முத்துக்குமார், சிம் கார்டுவிற்கும் பெரம்பூர் பகுதி விநியோகஸ்தர்கள் ஜெகதீஷ், சிகாசுதீன் ஆகிய 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
சீன கடன் செயலிகளுக்கான முதலீடுகள் குறித்து விசாரிக்கும் அமலாக்கத் துறையினர், சென்னைமத்திய குற்றப்பிரிவு போலீஸிடம் இருந்து வழக்கு விவரங்களை நேற்று வாங்கிச் சென்றனர்.