

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை அடுத்த கதிரிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). இவர், பிளஸ் 2 தேர்ச்சி அடைந்து, ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளதாக சான்றிதழ் கொடுத்து கடந்த 1999-ம் ஆண்டு ஆசிரியர் பணி பெற்றார். இவர் காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளிபுதூர் அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ராஜேந்திரன் போலி சான்றிதழ் கொடுத்து பணி நியமனம் பெற்றதாக, 2019-ல் குண்டலப்பட்டியை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவர், முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து விசாரணையில், ராஜேந்திரன் 10-ம் வகுப்பில் கூட தேர்ச்சி பெறாததும், பணம் கொடுத்து போலியாக 10-ம் வகுப்பு, பிளஸ் 2, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி சான்றிதழ்களைப் பெற்று பணியில் சேர்ந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட கல்வி அலுவலர் கலாவதி, எஸ்பி பண்டி கங்காதரிடம் புகார் அளித்தார். காவேரிப்பட்டணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை தேடி வந்தனர். இந்நிலையில் விசாரணைக்காக காவேரிப்பட்டணம் வட்டார கல்வி அலுவலகத்துக்கு நேற்று வந்த ராஜேந்திரனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.