

தருமபுரி மாவட்டம் அரூரில் நேற்று முன்தினம் இரவில் 94 மிமீ மழை பெய்ததால், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், நெல் வயல்களை மழைநீர் சூழ்ந்தது. இதனால், பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் அரூர், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங், சித்தேரி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. அரூரில் நேற்று முன்தினம் இரவில் தொடங்கி நேற்று காலை வரை தொடர்ந்து கனமழை பெய்தது. அரூரில் நேற்று காலை 8 மணி வரையிலான கணக்கீட்டின்படி 94 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மழையால் அரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் மற்றும் அதன் அருகே உள்ள பெரியார் நகர் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது.
பெரியார் நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் இதனால் அவதியுற்றனர். அரூர் அடுத்துள்ள முத்தாளம்பட்டி, கம்மாளம்பட்டி, மாவேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
இதுதொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, ‘‘வள்ளி மதுரை அணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் வரட்டாறு வழியாகச் சென்று அருகே உள்ள ஏரிகளுக்கு கால்வாய் மூலமாக செல்கிறது. ஊராட்சி நிர்வாகம் கால்வாய்களை சீரமைக்காததாலும், ஏரி, குளம், குட்டைகளில் குடி மராமத்து பணிகளை மேற்கொள்ளாததாலும் கால்வாய் வழியாகச் செல்லும் நீர், இரவில் பெய்த மழை நீருடன் சேர்ந்து அருகே உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது. தண்ணீர் தேக்கத்தால் வயல்களில் உள்ள நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாராக உள்ள நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் செல்ல கால்வாய்களைத் தூர்வார வேண்டும். இதன் மூலம் தண்ணீர் ஏரிகள், குளங்களுக்குச் செல்லும்,’’ என்றனர்.
அரூர் பெரியார் நகரில் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது தொடர்பாக, தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், அப்பகுதியைப் பார்வையிட்டார். அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘சாக்கடை கால்வாய், சாலை வசதி உள்ளிட்டவை இல்லாமல் அவதியுற்று வரும் நிலையில், தற்போது பெய்த மழையால், வீடுகளைச் சுற்றி கழிவுநீருடன் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது,’’ என்றனர்.
இதனைத் தொடர்ந்து அரூர் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அலுவலர்களை நேரில் வரவழைத்த தருமபுரி மக்களவை உறுப்பினர், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மழைநீர் வடிகால் அமைக்க திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அலுவலர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று, நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்,’’ என்று அறிவுறுத்தினார்.