Published : 07 Jan 2021 08:11 PM
Last Updated : 07 Jan 2021 08:11 PM

ஜன.10- கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் போராட்டம்; கடைசி நபர் கைதாகும் வரை திமுக ஓயாது: ஸ்டாலின் 

சென்னை

பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படும் வரை திமுகவின் நியாயம் கேட்கும் போராட்டம் ஓயாது, ஜன.10 அன்று பொள்ளாச்சியில் கனிமொழி தலைமையில் போராட்டம் நடக்கும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 250-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்த கொடூரர்களைக் காப்பாற்றிய ஆட்சி எடப்பாடி அதிமுக ஆட்சி, காவல் துறையைத் தன் கையில் வைத்துள்ள முதல்வர் பழனிசாமி, நீதி கேட்டு பொதுமக்கள் போராட்டம் தீவிரமடையும் வரை இந்த வழக்கைக் கண்டுகொள்ளவில்லை.

ஏனோ தானோவென இருந்துவிட்டார். திமுக சார்பில் பல போராட்டங்கள் குறிப்பாக, மகளிரணியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட பிறகு, தமிழகத்தின் தாய்மார்கள் அனைவரும் ஒருங்கிணைந்த குரல் எழுப்பிய பிறகு, முதலில் சிபிசிஐடிக்கும் - பிறகு சிபிஐக்கும் இந்தப் புகாரை மாற்றினார்.

இந்தக் காலகட்டங்கள் முழுவதிலும் - பத்திரிகைகளில், சமூக வலைதளங்களில் இளம்பெண்களைச் சீரழித்தவர்கள் அதிமுகவின் முன்னணிப் பிரமுகர்களுடன் சில அமைச்சர்களுடன் இருந்த காட்சிகள் தமிழகமெங்கும் வலம் வந்தன. ஏன், இன்னும் கூட அந்தக் காட்சிகளைச் சமூக வலைதளங்களில் காண முடிகிறது. 'அண்ணா அடிக்காதீங்க' எனும் கதறல் இன்னும் தமிழகத்தின் பெண் பிள்ளைகளை பெற்றோர் காதுகளில் பயத்தோடு கேட்டுக் கொண்டே இருக்கிறது.

இந்தப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரையே சந்தித்துப் புகாரளிக்கும் அளவிற்குத் தண்ணீர் தெளித்து சுதந்திரம் அளித்திருந்தது அதிமுக ஆட்சி. சிலரைக் குண்டர் சட்டத்தில் அடைத்தாலும், அதை வேண்டுமென்றே முறையாக வாதிடாமல் கோட்டை விட்டு - அந்தக் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம் ரத்தாவதற்குக் காரணமாக இருந்தது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி.

இதில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுகவின் மாணவரணி நிர்வாகியைப் பாதுகாத்து வந்தது அதிமுக ஆட்சி. இப்போதுதான், அதுவும் இந்தப் பாலியல் வன்கொடுமை வழக்கு வெளிச்சத்திற்கு வந்து ஏறக்குறைய இரு ஆண்டுகள் முடியப் போகின்ற நேரத்தில், வேறு வழியின்றி, கைது செய்யப்பட்டுள்ளார். சிபிஐ அமைப்புதான் அதிமுக நிர்வாகியையே கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் யாருடன் இருந்தார்? எந்த அமைச்சருடன் இருந்தார்? அப்பகுதியில் உள்ள எந்த முன்னணி அதிமுக பிரமுகருடன் இருந்தார் என்பது பற்றிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் நேற்றிலிருந்து மீண்டும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

எனவே, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களையும் தாண்டி, அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் உள்ளார்கள் என்பது தெள்ளத் தெளிவாகிறது. இரு ஆண்டுகளாகக் கட்சியில் பாதுகாப்புடன் வைத்திருந்த அருளானந்தம் என்ற மாணவரணிச் செயலாளரை இப்போது நீக்கியிருந்தாலும் - இந்தக் கொடுங்குற்றத்தில் பங்குள்ள பல முக்கியப் புள்ளிகள் இன்னும் அதிமுகவில் மறைந்து இருக்கிறார்கள்.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட திருநாவுக்கரசு, “முக்கியப்புள்ளிகள் இதில் இருக்கிறார்கள். அந்த முக்கியப் புள்ளிகளைத் தப்ப விட நாங்கள் பலிகடா ஆக்கப்படுகிறோம்” என்று வெளியிட்ட வாக்குமூலம் அடங்கிய வீடியோ காட்சிகள் இன்னும் சமூக வலைதளங்களில் அப்படியேதான் இருக்கின்றன. அந்த வீடியோவை வெளியிட்ட 48 மணி நேரத்தில் திருநாவுக்கரசை அப்போது கைது செய்ததும் அதிமுக ஆட்சியே.

இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கீழ்மட்ட அதிமுக நிர்வாகியுடன் பெண்ணினத்தைச் சீர்குலைத்த இந்த வழக்கை முடித்து வைத்து விடாமல் - இக்குற்றத்தில் ஈடுபட்ட அதிமுகவின் முக்கியப் புள்ளிகளையும் - மேலும் யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் அதிமுகவின் முன்னணிப் புள்ளிகளையும் உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, திமுக மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி தலைமையில் ஜன.10 அன்று காலை 10 மணிக்கு பொள்ளாச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

பாலியல் வன்கொடுமைக்குக் காரணமான அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டிக்கப்படும் வரை திமுகவின் நியாயம் கேட்கும் போராட்டம் ஓயாது, தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x