

கோவையில் நடந்த திமுகவின் கிராம சபை கூட்டத்தில் பெண் ஒருவர் தாக்கப்பட்டார். அதற்கு ஏன் கனிமொழி இன்னும் கண்டனம் தெரிவிக்கவில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை ஆகிய இடங்களில் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை வகித்து மொத்தம் 815 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். இதில், கடம்பூர் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் 130 பேருக்கும், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் பள்ளியில் 216 பேருக்கும், கழுகுமலை பள்ளியில் 120 பேருக்கும், ஆர்.சி. சூசை பள்ளியில் 96 பேருக்கும், கம்மவார் பெண்கள் பள்ளியில் 99 பேருக்கும், லூயிசா பெண்கள் பள்ளியில் 85 பேருக்கும், காளாம்பட்டி அரசு பள்ளியில் 24 பேருக்கும், வானரமுட்டி அரசு பள்ளியில் 45 மொத்தம் 815 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
மேலும், கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஆண்டு விடுபட்ட 34 பேருக்கு இலவச மடிக்கணினிகளை அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சிகளில், கோட்டாட்சியர் விஜயா, கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் முனியசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தமிழகத்தில் கரோனா காலத்தில் இருந்து அளிக்கப்பட்ட தளர்வுகளின் முதலிலேயே திரையரங்குகள் திறக்கப்படவில்லை.
கடந்த நவ.10-ம் தேதி தான் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க முதல்வர் அனுமதி வழங்கினார். தற்போது கரோனா பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலம் என்பதால், பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிக ஆர்வமாக இருக்கின்றனர். எனவே, 100 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சானிடைசர் பயன்படுத்த வேண்டும். இடைவேளையின்போது கழிவறைகளை பயன்படுத்திலும் கட்டுப்பாடுகள் என பல்வேறு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
இதனை திரையரங்கு உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்டுப்பாடுகள் உள்ளது என மத்திய அரசு சுட்டிக்காட்டி கடிதம் எழுதி உள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர், உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பார்.
கோவையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஒரு பெண்ணிடம் எந்த ஊர் என ஸ்டாலின் கேட்கிறார். எந்த ஊர் என்று தெரியாமலே கிராம சபை கூட்டத்துக்கு வந்துள்ளீர்களா என நியாயமான கேள்வியை அந்த பெண் கேட்டார். இதற்கு முறையான பதில் சொல்ல வேண்டும். ஆனால் திமுக குண்டர்கள், ரவுடிகளை வைத்து மானபங்கப்படுத்தப்பட்ட அளவுக்கு தாக்கப்படுகிறார். அன்றைக்கு கனிமொழிக்கு உடனடியாக குரல் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படவில்லை. இதுவரை அவர் கண்டிக்கவில்லை.
ஆனால், கோவை அருகே நடந்த பாலியல் வன்கொடுமை நடந்ததாக கூறுகின்றனர். அதற்கு அரசு நியாயமான விசாரணை நடக்க வேண்டும். யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதே தமிழக முதல்வர் தான். யாராக இருந்தாலும் ஒளிவு மறைவு இல்லாமல் தண்டிக்கப்பட வேண்டும். நேற்று கைது செய்யப்பட்டவர் அதிமுகவில் பொறுப்பில் இருந்தவர் என சொல்கின்றனர்.
அவரை கைது செய்வதில் அரசு குறுக்கீடு செய்யவில்லை. சட்டம் தனது கடமையை செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இப்படி எந்த பாகுபாடும் இல்லாமல் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவதில் முதல்வர் தெளிவாக இருக்கிறார். ஒரு பெண் பொது இடத்தில் திமுக ரவுடிகளால் அநாகரீகமாக நடத்தப்பட்டு, தாக்கப்பட்டு, காவல்துறையால் அந்த பெண் அழைத்து செல்லும் நேரத்திலும் தாக்கப்படுகிறார். இதையெல்லாம் கண்டிக்காத கனிமொழியை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம், என்றார் அவர்.