Last Updated : 07 Jan, 2021 07:35 PM

 

Published : 07 Jan 2021 07:35 PM
Last Updated : 07 Jan 2021 07:35 PM

பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்: அரசு அதிகாரிகளுக்கு திருப்பத்தூர் ஆட்சியர் உத்தரவு

திருப்பத்தூர் நகரப் பகுதிகளில் அதிகரித்து வரும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என நகராட்சி மற்றும் வருவாய்த் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று உத்தரவிட்டார். இதற்கிடையே, பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும்பாலான சாலைகளில் வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்களால் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரித்து வருவதால் பேனர்கள் வைப்பதைத் தடுக்க, பல விதிமுறைகளைத் தமிழக அரசு விதித்திருந்தது. முறையான அனுமதி பெற்று சில நாட்களுக்கு மட்டும் பேனர்கள் வைக்கலாம் என அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசியல் கட்சிகளுக்குப் போட்டியாக, பிறந்த நாள், திருமண நிகழ்ச்சி, வரவேற்பு நிகழ்ச்சி, கண்ணீர் அஞ்சலி என்ற பெயரில் பலரும் போட்டி போட்டுக்கொண்டு சாலையே தெரியாத அளவுக்குப் பெரிய அளவிலான பேனர்களை வைக்கத் தொடங்கியுள்ளனர். குறுகிய சாலைகளிலும் பேனர்கள் ஆக்கிரமித்துள்ளதால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பத்தூர் நகரம் முழுவதும் சாலையோரங்களில் இன்று காலை பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதைக் கவனித்த மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், உடனடியாக பேனர்களை அகற்றவும், அனுமதியின்றி பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வருவாய்த் துறை மற்றும் நகராட்சி அலுவலர்களுக்கு இன்று உத்தரவிட்டார்.

இதையடுத்து, பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி பேனர்கள், தனியார் நிறுவன பேனர்கள் அனைத்தையும் உடனடியாக அகற்றும் பணியில் நகராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர். ஆனால், குறிப்பிட்ட கட்சி பேனர்களை மட்டுமே அகற்றியதாகவும், ஆளும் கட்சியினர் வைத்திருக்கும் பேனர்களை அகற்றவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால், ஆளும் கட்சிக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் செயல்படுவதாகச் சந்தேகம் எழுந்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு திருப்பத்தூர் நகரில் இருக்கும் அனைத்துத் தரப்பு பேனர்களையும் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, ''அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட பேனர்களைப் பாரபட்சமின்றி அகற்றியுள்ளோம். சிலர் அனுமதி பெற்று பேனர் வைத்துள்ளனர். அவர்களுக்கான கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதால், இரண்டொரு நாளில் அந்த பேனர்களையும் அகற்ற நடவடிக்கை எடுப்போம். இதில், யாருக்கும் சாதகமாகவோ, பாதகமாகவோ அரசு அதிகாரிகள் செயல்படவில்லை'' என விளக்கம் அளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x