

எல்இடி வழக்கில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராகவும், ரேஷன் அரிசி வழக்கில் அமைச்சர் காமராஜுக்கு எதிராகவும் திமுக தொடர்ந்த வழக்கில் இதேபோன்ற மற்ற வழக்குகளுடன் சேர்த்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 524 கிராமங்களில் உள்ள 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்தியதில், 500 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு செய்ததாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார் அளித்திருந்தார்.
கரோனா காலத்தில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்ததால், ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ ரேஷன் அரிசி கூடுதலாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில், ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ அரிசி மட்டும் தமிழகத்தில் வழங்கப்பட்டது.
மீதமுள்ள அரிசியை நவீன அரிசி ஆலைகளுக்கு அனுப்பி ஒரு கிலோ 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்ததாக, உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு இயக்குனரிடம் மற்றொரு புகாரை அப்பாவு அளித்திருந்தார்.
இந்த இரு புகார்கள் மீதும் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்காமல், தனது புகார்களை பொதுத்துறைச் செயலருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை அனுப்பி வைத்துள்ளதால், ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று வழக்குப் பதிய உத்தரவிடக் கோரி அப்பாவு சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகளைத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அப்பாவு தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி பொது ஊழியர்களுக்கு எதிரான புகார் மீது விசாரணை நடத்த பொதுத்துறைச் செயலாளர் அனுமதி பெற வேண்டும் என்ற 2018-ம் ஆண்டு அரசாணையை எதிர்த்து, வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த வழக்குடன் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார்.
இதையேற்ற நீதிபதிகள், மூன்று வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பதாகக் கூறி, வழக்கை 6 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.