Published : 07 Jan 2021 06:11 PM
Last Updated : 07 Jan 2021 06:11 PM

பழநியில் 152 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பேடு கண்டுபிடிப்பு: கோயிலில் நித்ய பூஜை செய்ய எழுதிக்கொடுத்தது

பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலுக்கு தினமும் நித்யபூஜை செய்வதற்காக கந்தசாமி பாண்டாரம் என்பருக்கு எழுதிக்கொடுத்த 152 ஆண்டுகள் பழமை வாய்ந்த செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பரமேஸ்வரன் என்பவர் வைத்திருந்த செப்பேடு குறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி மற்றும் ஞானசேகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து நாராயணமூர்த்தி கூறியதாவது:

உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த வெள்ளாளகவுண்டர் சமூகத்தினரால் இந்தசெப்பேடு எழுதப்பட்டுள்ளது.

பழனிமலைக் கோயிலில் தண்டாயுதபாணி சுவாமிக்கு நித்யபூஜை செய்வதற்காக கந்தசாமி பண்டாரம் என்பவருக்கு எழுதிக் கொடுத்ததாகவும், தண்டாயுதபாணி சுவாமிக்கு தினமும் திருமஞ்சன குடம் எடுத்து 120 வில்வ இலை, ஒரு கிண்ணம் சந்தனம், விபூதி உள்ளிட்டவையால் பூஜை செய்து நெய்வேத்தியம் செய்வதற்கு கூலியாக, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து அரை ரூபாய் முதல் இரண்டரை ரூபாய் வரை திரட்டி ஆண்டுக்கு ரூ.115 கூலியாக வழங்க தீர்மானித்து எழுதப்பட்டுள்ளது.

இந்த செப்பேடு 1868 ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 28 ஆம் நாள் எழுதப்பட்டுள்ளது. 152 ஆண்டுகள் முந்தைய இந்த செப்பேடு 25 செ.மீ அகலமும், 45 செ.மீ உயரமும், 2 கிலோ எடையும் கொண்டுள்ளதாக உள்ளது.

செப்பேட்டில் வேல், சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. சிவமயம் தண்டாயுதபாணி துணை என துவங்கி வைகை நீடுக மாமழை என்ற பாடலுடன் 106 வரிகள் இந்த செப்பேட்டில் உள்ளது.

இந்த செப்பேட்டின் படி கந்தசாமி பண்டாரம், தண்டாயுதபாணி சுவாமிக்கு பூஜை செய்வதற்கு அறை மற்றும் மடத்தை பயன்படுத்திக் கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோயிலுக்கு நன்மை செய்பவர்கள் கங்கை மற்றும் சண்முக நதியில் பூஜை செய்வதற்கு சமமாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, என்றார்.

இந்த செப்பேடு எழுதிக்கொடுக்கப்பட்ட கந்தசாமி பண்டாரத்தின் தற்போது ஐந்தாவது தலைமுறையினரான பரமேஸ்வரன் என்பவரிடம் தற்போது உள்ளது. ஆய்வின் போது தொல்லியல் ஆய்வு மாணவர்கள் திருவேங்கடம், அஜய் கிருஷ்ணன், பிரசன்னா ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x