

வரும் தேர்தலில் கலவரத்தைத் தூண்டுவதற்காக தமிழகத்தில் நக்சலைட்டுகள் பயிற்சி பெற்று வருகின்றனர். உளவுத்துறையினர் இதைக் கண்டறிந்து தடுக்க வேண்டும் என இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழகத்தில் 1980-ல் நாத்திகப் பிரச்சாரம் வேகமாக இருந்த காலத்தில் இதைத் தடுக்கவும், இந்துக்களுக்குப் பரிந்து பேசவும், இந்து மக்களைக் காக்கவும் இந்து முன்னணி அமைப்பை ராமகோபாலன் துவக்கினார்.
இந்துக்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்க திருச்சியில் பயிற்சிக் கூடத்தை அமைத்தார்.
நாற்பது ஆண்டுகாலம் இந்த இயக்கத்தை நடத்தி தனது 94 வயதில் மறைந்தார். அவர் அமைத்த பயிற்சிக் கூட வளாகத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மணிமண்படம் கட்டுவதற்காக வரும் 25-ம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்திலுள்ள ஆன்மிகவாதிகள், சமுதாயப் பெரியவர்கள், இந்து மக்களை சந்தித்து வருகிறோம்.
சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வில் திறமைக்கான கேள்விகளை கேட்காமல், பெரியார் வாழ்க்கை, சாதியைத் தூண்டும் திரைப்படங்கள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அரசுத்துறைகளிலும் நாத்திவாதிகள் ஊடுருவிட்டனர். இவர்களால் இனி நடிகைகள் ஜோதிகா, நக்மா போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த கேள்விகள் கேட்க வாய்ப்புள்ளது.
தேனி, உடுமலைப்பேட்டை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நக்சலைட்டுகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்கள் வரும் தேர்தலில் கலவரத்தை தூண்டுவர் என கூறப்படுகிறது. திறமையான உளவுத்துறை அதிகாரிகளை நியமித்து இதை தடுக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகள் அதிகம் உள்ளனர்.
இங்கு ஒரு காவல் கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்புப்படை அமைத்து கண்காணிக்க வேண்டும். என்ஐஏ போன்ற மத்திய உளவுத்துறை தான் பயங்கரவாதிகளை கண்டறிந்து கைது செய்கிறது. தமிழக உளவுத்துறையினர் இதுபோன்ற நடவடிக்கையில் தீவிரம் இல்லை.
கோயில்களுக்க ஆன்மிகவாதிகளை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கோயில்களை விட்டு வெளியேற வேண்டும். இதற்கு தனிவாரியம் அமைத்து கோயில்களை பராமரிக்க வேண்டும். நாங்கள் அரசியல் கட்சி இல்லை.
ஆனால் வரும் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை முடிவு செய்வோம். மத மாற்றம், பசுவதை தடுப்பு, ஆன்மிகத்திற்கு தனிவாரியம் போன்றவற்றை தேர்தல் அறிக்கையாக விடும் கட்சிக்கு இந்து முன்னணியினர் ஆதரவு தெரிவிப்பர். ஊழல் அரசு தான் தமிழகத்தில் செயல்படுகிறது. ஆனால் அது ஆன்மிக அரசாகத்தான் உள்ளது.
திமுக கூட்டணிக் கட்சிகள் வெளிநாட்டு நிதியுதவியுடன் சாதி,மத கலவரங்களை தூண்டிவிடுகின்றனர். சீனாவும், கிறிஸ்தவ நாடுகளும் இந்தியாவை துண்டாட நினைக்கின்றன எனத் தெரிவித்தார். பேட்டியின்போது ராமநாதபுரம் மாவட்ட பொதுச் செயலாளர் கே.ராமமூர்த்தி உடனிருந்தார்.