

தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சாலை, வாய்க்காலெங்கும் அரிசி பரவிக் கிடந்தது. இதுபற்றி விசாரித்தபோது, மத்திய அரசு கரோனா காலத்தில் மதிய உணவுக்குப் பதிலாக பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய அரிசியே மழையால் வீணானதாகத் தெரியவந்துள்ளது.
புதுவை தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள மாநிலக் கூட்டுறவு நுகர்வோர் இணையக் கிடங்கில் 100 டன் அரிசியை இருப்பு வைக்கலாம்.
இங்கு கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்காக மத்திய அரசு வழங்கிய அரிசி மற்றும் புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கான அரிசி மூட்டைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2 நாட்களாகப் புதுவையில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக கிடங்கின் வெளியே வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் நனைந்தன. மூட்டையிலிருந்த அரிசி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை சாலைகளில் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டு கால்வாய்களில் கலந்தது. ஏராளமான அரிசி சாலையிலும், கால்வாயிலும் பரவிக் கிடந்தது.
இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதனைக் கண்ட தொழிற்பேட்டையைச் சேர்ந்தவர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து வருவாய்த்துறை ஊழியர்கள் கிடங்குக்கு வந்து பார்வையிட்டனர்.
வருவாய்த்துறை தரப்பில் விசாரித்தபோது, "கிடங்கில் நல்ல அரிசி மூட்டைகள் பாதுகாப்பாக இருந்தன. சில மூட்டைகள் மழையில் நனையும் அபாயத்தில் இருந்தன. உடனடியாக அந்த மூட்டைகளை வாணரப்பேட்டையில் உள்ள இந்திய உணவுக் கழக குடோனுக்கு இடமாற்றம் செய்துவிட்டோம். கிடங்கின் வெளியே பயனற்ற அரிசி மூட்டைகள் இருந்தன. அவை மழையால் அடித்துச் செல்லப்பட்டதே பரவிக் கிடந்ததற்குக் காரணம்" என்று தெரிவித்தனர்.
தொழிற்பேட்டையில் உள்ளவர்களோ, "சிவப்பு அட்டைதாரர்களுக்குத் தரவேண்டிய அரிசி பெரும்பாலும் தரப்பட்டது. குறிப்பாக, கரோனா காலத்தில் மதிய உணவு தர முடியாமல் அதற்கான அரிசியை மாணவ, மாணவிகளுக்குத் தந்தனர். அந்த அரிசியைத்தான் முழுமையாக விநியோகிக்கவில்லை. அந்த அரிசியே பாதுகாக்கப்படாமல் மழையால் சாலைகள், கால்வாய்களில் பரவிக் கிடக்கும் வகையில் அஜாக்கிரத்தையாக செயல்பட்டோர் மீது நடவடிக்கை தேவை" என்று தெரிவித்தனர்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆட்சியர் பூர்வா கார்க் ஆலோசனை நடத்தி வருகிறார்.