ஆப்பிரிக்க கெளுத்தி மீன் வளர்ப்போர் மீது நடவடிக்கை: தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

ஆப்பிரிக்க கெளுத்தி மீன் வளர்ப்போர் மீது நடவடிக்கை: தென்காசி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
Updated on
1 min read

தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்க தடைவிதிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி ஆப்பிரிக்க கெளுத்தி மீன் வளர்ப்பு செய்தால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. இந்த மீன்கள் காற்று சுவாச மீன்களாகும். இவை இடைவிடாமல் மீன்களை வேட்டையாடி உண்ணும் திறன் கொண்டவை. மேலும் 8 ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியது.

இதனால் இந்த மீன்கள் நீர்நிலைகளில் நுழைந்துவிட்டால், அவற்றை அழிப்பது சாத்தியமில்லாத ஒன்று. மேலும், இந்த மீன்கள் மிகக்குறைந்த அளவு தண்ணீரிலும் இனப்பெருக்கம் செய்யும் திறன் கொண்டவை. நன்னீர் மீன் இனங்களையும், அவற்றின் முட்டைகளையும் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள் உணவாக்கிக்கொள்வதால் நமது பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் நிலை உருவாகும்.

இந்த மீன்களை பண்ணைக் குட்டைகளிலோ, அல்லது மீன் வளர்ப்பு குளங்களிலோ வளர்த்தால் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காலங்களில் குளங்களிலிருந்து தப்பித்துவிட வாய்ப்பு உள்ளது.

அவ்வாறு தப்பிச்செல்லும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் ஏரி மற்றும் ஆறுகளில் சென்று, பிற மீன் இனங்களை அழிப்பதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை தவிர, மற்ற பாரம்பரிய மீன் இனங்கள் அழியும் நிலை உருவாகும். எனவே, தடைசெய்யப்பட்ட ஆப்பிரிக்க கெளுத்தி மீன்களை வளர்க்க தடைவிதிக்கப்படுகிறது.

இந்த உத்தரவை மீறி ஆப்பிரிக்க கெளுத்தி மீன் வளர்ப்பு செய்தால், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள மீன் பண்ணையாளர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட மீன்களை மீன்வளத் துறையின் ஆலோசனை பெற்று வளர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in