Published : 07 Jan 2021 03:47 PM
Last Updated : 07 Jan 2021 03:47 PM

மேடைப்பேச்சு, எழுத்தாளுமை உள்ளவரா நீங்கள்?- தமிழக அரசு நடத்தும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ளலாம்

சென்னை

மேடைப்பேச்சு, எழுத்தாளுமை உள்ள இளைஞர்கள், மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டியைத் தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறை நடத்துகிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் ஒரு சொல் ஒரு நிமிட உடனடி பேச்சுப் போட்டி ஆகியவை நடத்தப்பட உள்ளன.

இப்போட்டிகள் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 17 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என இரு பிரிவுகளாக நடத்தப்பட உள்ளது.

இந்தப் போட்டிகள் வருகின்ற ஜன.11 அன்று காலை 10 மணிக்கு நடத்தப்பட உள்ளன. நடக்கும் இடம் நெ-28 முதல் தளம், டான்சி கட்டிடம், திரு.வி.க. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-32ல் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம்.

பேச்சுப் போட்டி - கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி, எனக்குப் பிடித்த தலைவர், விரல்கள் பத்தும் மூலதனம் ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 5 நிமிடங்களுக்கு மிகாமல் பேசலாம்.

கட்டுரை போட்டி - இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, இன்றைய சேமிப்பு நாளைய பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகிய தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் 5 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்.

ஒரு சொல் ஒரு நிமிட உடனடி பேச்சுப் போட்டிக்கான தலைப்பு போட்டியின்போது வழங்கப்படும்.

இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.750, ரூ.500, ரூ.250 மதிப்பிலான புத்தகங்கள் மற்றும் சான்றிதழ் தேசிய இளைஞர் தினமான ஜன.12 அன்று மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் இளைஞர் தின விழாவில் வழங்கப்பட உள்ளது.

எனவே இப்போட்டிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x