Last Updated : 07 Jan, 2021 03:37 PM

 

Published : 07 Jan 2021 03:37 PM
Last Updated : 07 Jan 2021 03:37 PM

புதுச்சேரி ஆளுநர் மாளிகையைச் சுற்றி 3 அடுக்குப் பாதுகாப்பில் மத்திய படை; போராட்ட இடத்தை மாற்றிய காங்கிரஸ்

புதுச்சேரி ராஜ்நிவாஸைச் சுற்றி 3 அடுக்குப் பாதுகாப்பில் மத்திய படையினர் ஈடுபட்டுள்ளனர். இச்சூழலில் போராட்டம் நடக்கும் இடத்தை மாற்றி காங்கிரஸ் அறிவித்துள்ளது. ராஜ்நிவாஸுக்கு பதிலாக அண்ணாசிலை பகுதியில் போராட்டம் நடக்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.

மக்கள் நலத்திட்டங்களைத் தடுப்பதாக, புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் முன்பு நாளை (ஜன.08) முதல் தொடர் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது.

காங்கிரஸ் தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளான இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், புதிய நீதிக்கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள், தொழிற்சங்கங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. எதிர்ப்பு நிலையில் உள்ள முக்கியக் கூட்டணிக் கட்சியான திமுக ஆதரவு தெரிவிக்கவில்லை. தொடர்ந்து மவுனமாகவே இருக்கிறது.

இந்நிலையில், தேர்தல் வாக்குறுதிகள், சட்டப்பேரவை அறிவிப்புகளை நிறைவேற்றவில்லை எனக்கூறி, முதல்வர் நாராயணசாமியைக் கண்டித்து அவரின் வீட்டை முற்றுகையிட்டுத் தொடர் போராட்டம் நடத்தப்படும் என, பாஜக போட்டி போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்திற்கு இதுவரை பாஜக அனுமதி பெறவில்லை.

போட்டி போராட்ட அறிவிப்பால் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் புதுவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை வளாகம், தலைமைச் செயலகம், ஜிப்மர், அரசு மருத்துவமனை, முதல்வர் இல்லம் சுற்றியுள்ள 500 மீட்டர் பரப்பளவில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது, அனுமதியின்றி ஊர்வலம், போராட்டம் நடத்தக் கூடாது எனத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் அரசியல் கட்சி நிர்வாகிகளை அழைத்துப் பேச்சுவார்த்தையும் நடத்தினார். ஆனால், காங்கிரஸ் கூட்டணியினர் போராட்டம் நடத்துவதில் உறுதியாக இருந்தனர். இந்நிலையில், ராஜ்நிவாஸ் முன்பு போராட்டம் நடத்த ஆட்சியர் அனுமதி வழங்கவில்லை.

இதனிடையே, மத்திய உள்துறைக்கு டிஜிபி பாலாஜி ஸ்ரீவத்ஸவா எழுதிய கடிதப்படி, கேரளா, தெலங்கானா மாநிலங்களில் இருந்து 350 பேர் கொண்ட 3 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படையினர் புதுவைக்கு வந்துள்ளனர். மத்திய பாதுகாப்புப் படையினர் ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை வளாகம், தலைமைச் செயலகம், முதல்வர் நாராயணசாமியின் வீடு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜ்நிவாஸை சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்தியப்படை வீரர்கள். படம்: எம்.சாம்ராஜ்

பாரதி பூங்கா இன்று முதல் மூடல்

ஆளுநர் மாளிகை எதிரே உள்ள பாரதி பூங்கா இன்று (ஜன.07) காலை முதல் மறு அறிவிப்பு வரும் வரை பூட்டப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை, சட்டப்பேரவை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தடுப்புக்கட்டைகள், இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆளுநர் மாளிகை அருகில் தடையை மீறிப் போராட்டம் நடத்தினால் பேரிடர் தடுப்புச் சட்டத்தின்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என, டிஜிபி, ஆட்சியர் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மத்திய பாதுகாப்புப் படைக்கு உறுதுணையாக புதுவை போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், காவல்துறை சார்பில் அண்ணாசிலை அருகே போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும், அவ்வழியே செல்லும் வாகனங்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது, கரோனா கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து போராட்டம் நடத்த வேண்டும் என்றும் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, போராட்டம் ஆளுநர் மாளிகையிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றப்பட்டது தொடர்பாக புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"நாளை முதல் ஜன. 11-ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பாக ஆளுநர் கிரண்பேடியை மாற்றக் கோரி அண்ணாசிலையிலிருந்து வெங்கடசுப்பாரெட்டியார் சிலை இடையில் உள்ள மறைமலை அடிகள் சாலையில் போராட்டம் நடக்கிறது. ஆளுநர் மாளிகையில் போட்டி அரசாங்கம் நடத்தும், மக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படும் ஆளுநர் கிரண்பேடியின் அட்டூழியங்களை எதிர்க்க வேண்டும்".

இவ்வாறு ஏ.வி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x