

நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள கரோனா தடுப்பூசி ஒத்திகையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சென்னையில் கலந்துகொண்டு பார்வையிடுகிறார் என, மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.3.5 கோடியில் அதிநவீன இருதய சிறப்பு சிகிச்சைப் பிரிவை இன்று (ஜன.7) திறந்து வைத்த பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
"கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் கால்நடைத் துறையோடு இணைந்து சுகாதாரத் துறை அலுவலர்களும் நோய்த் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, மக்கள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு வேகவைத்து உண்ண வேண்டும். இதனால், பதற்றம், பயம் தேவையில்லை. ஆனால், முன்னெச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
தமிழகத்தில் 18 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அதி நவீன இருதய சிறப்பு சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 9,031 பேருக்கு இலவசமாக ஆஞ்சியோ மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் மாரடைப்பால் பாதிக்கப்படுவோரை அருகே உள்ள இருதய சிறப்பு சிகிச்சை மையத்தில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிப்பதற்கான நெட்வொர்க் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநில உணவுத் துறை அமைச்சர் காமராஜ் நலமுடன் இருக்கிறார். ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
நாடு முழுவதும் நாளை (ஜன.08) காலை 9 மணியில் இருந்து 11 மணிக்குள் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற உள்ளது. அதில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் சென்னையில் கலந்துகொண்டு பார்வையிட உள்ளார். சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனையிலும் பார்வையிட உள்ளார்".
இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.