

ஜல்லிக்கட்டால் ஏற்படும் உயிரிழப்பு, காயங்களைத் தடுக்க மருத்துவக் குழுவில் பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு கோவை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக, அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜேஷ் கண்ணா இன்று (ஜன.07) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு உடல் தகுதி ஆய்வு, உயிர்காக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதனால் ஆண்டுதோறும் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனைத் தடுக்க மாடுபிடி வீரர்களுக்கு பிசியோதெரபி மருத்துவர்கள் பரிந்துரையோடு உயிர் காக்கும் கவசங்களான வயிற்றுக் கவசம், நெஞ்சுக் கவசம், சீறுநீரகக் கவசம் ஆகியவற்றை வழங்க வழிவகை செய்ய வேண்டும். இதன் மூலம் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.
அதேபோல், எலும்பு முறிவு மற்றும் மூட்டு விலகாமல் இருக்க முழங்கால், முழங்கை, கணுக்காலைப் பாதுகாக்கப் பாதுகாப்புப் பட்டைகளை வழங்க வேண்டும். போட்டி தொடங்கும் முன், பிற விளையாட்டுப் போட்டிகளைப் போல மாடுபிடி வீரர்களின் உடற்தகுதியை பிசியோதெரபி மருத்துவரின் பரிசோதனை மூலம் உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக, இதயம், நுரையீரல் பிரச்சினைகள், உயர் ரத்த அழுத்தம் உள்ள மாடுபிடி வீரர்களை அனுமதிக்கக் கூடாது. போட்டியின்போது மாடுபிடி வீரர்களுக்கு ஏற்படும் காயங்களுக்குச் சிகிச்சை அளிக்க மருத்துவக் குழுவை நியமிக்க வேண்டும்.
இதில், பிற விளையாட்டு போட்டிகளைப் போலவே பொது மருத்துவர் மற்றும் விளையாட்டுத் துறை சார்ந்த பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏற்படாமல் தடுக்கலாம்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.