Published : 07 Jan 2021 12:31 PM
Last Updated : 07 Jan 2021 12:31 PM

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசுவதா?- உதயநிதி ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

சமீபத்தில் முதல்வர் பழனிசாமி, சசிகலா காலில் விழுந்தது குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிய வார்த்தைகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் உதயநிதி ஸ்டாலின் பேசும் பேச்சுகள் குறித்து அவ்வப்போது விமர்சனம் எழுந்ததுண்டு. இளம் தலைவராக உருவெடுத்துள்ள உதயநிதி, எதிர்க்கட்சியின் மூத்த தலைவர்களைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பது சர்ச்சையை எழுப்பியுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் குறித்து விமர்சித்துவிட்டு பின்னர் நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை எனப் பின்வாங்கினார்.

சமீபகாலமாக பிரச்சாரம் செய்துவரும் உதயநிதி, முதல்வர் பழனிசாமியை விமர்சனம் என்கிற பெயரில் சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றதைப் பற்றிப் பேசுவதைப் பலரும் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய அவர், இதே தொனியில் முதல்வர் பழனிசாமி சசிகலா காலில் விழுந்து பதவி பெற்றார் என்று பேசினார்.

அப்போது அவர் பேசிய வார்த்தைகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து பலரும் விமர்சித்துவரும் வேளையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டித்துள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு வருமாறு:

“பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்திப் பேசிய கருணாநிதியின் பேரன் என்பதை ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் திமுகவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி.

நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாகப் பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டுப் பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி.

பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில், இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது”.

இவ்வாறு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x