Published : 07 Jan 2021 10:15 AM
Last Updated : 07 Jan 2021 10:15 AM

பொள்ளாச்சி பாலியல் குற்றவழக்கில் ஈடுபட்ட அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்க: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

பொள்ளாச்சி பாலியல் குற்றவழக்கில் ஈடுபட்ட அனைவரையும் பாரபட்சமின்றி கைது செய்ய வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.பாலகிருஷ்ணன் இன்று (ஜன. 07) வெளியிட்ட அறிக்கை:

"பொள்ளாச்சியில் சமூக விரோதக் கும்பல் பெண்களை தொடர்ச்சியாக அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்த சம்பவம் 2019 பிப்ரவரியில் வெளிவந்தது. இதனால் தமிழகமே அச்சத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து போனது. இத்தகைய குற்றங்களில் ஆளும் கட்சியின் செல்வாக்கு படைத்தவர்களும், பொறுப்புகளில் உள்ளவர்களும் ஈடுபட்டிருக்கிறார்கள் எனவும், இக்குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பாரட்சமின்றி கைது செய்யவும், இவ்வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட பெரும்பாலான தமிழக அரசியல் கட்சிகளும், ஜனநாயக அமைப்புகளும் பங்கேற்ற வலுவான போராட்டங்கள் நடைபெற்றதை தொடர்ந்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டதோடு, இவ்வழக்கு 2019 ஏப்ரல் மாதம் சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆளும் அதிமுக கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள் உள்ளிட்ட மூன்று பேர் சிபிஐயால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் மூலம் பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஆளும் கட்சியினருக்கு நேரடியாக தொடர்புள்ளது என பலரும் முன்வைத்த குற்றச்சாட்டு உண்மை எனவும் நிரூபணமாகியுள்ளதோடு, இவ்வழக்கில் தொடர்புடைய இன்னும் சிலர் கைது செய்யப்படாமல் உள்ளார்கள் எனவும் தெரிய வருகிறது.

இவ்வழக்கு விசாரணையை ஏற்றுக் கொண்ட சிபிஐ 16 மாதங்களுக்கு பிறகே இவர்களை கைது செய்துள்ளது. இவ்வளவு தாமதம் அரசியல் தலையீட்டின் காரணமாக இருக்குமோ என்கிற ஐயமும் பொதுமக்கள் மத்தியில் வலுவாக எழுந்துள்ளது.

எனவே, பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் பாரபட்சமின்றி உடனடியாக கைது செய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், இவ்வழக்கின் விசாரணை அரசியல் தலையீடின்றி நேர்மையாக நடைபெற வேண்டுமெனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டுமெனவும் இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அமைப்பையும், காவல்துறை அதிகாரிகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு கிடைக்கும் தண்டனையை உறுதி செய்யும் பொருட்டே, காவல்துறை மற்றும் விசாரணை அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம்".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x