

‘மூன்றாவது கண்’ என்ற கண்காணிப்பு கேமரா திட்டம் பொதுமக்களின் முழு ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமானது என்று ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கண்காணிப்புகேமராக்கள் அதிகம் உள்ள பெருநகரங்களின் விவரங்கள் குறித்து‘சர்ப்ஷார்க்’ என்ற நிறுவனம் 138நாடுகளில் ஆய்வு நடத்தியது.
‘சர்ப்ஷார்க்’ நிறுவனமானது இணையப் பாதுகாப்பை வழங்கக்கூடியது. இணைய அந்தரங்க உரிமைகள், பாதுகாப்புக்கான தீர்வுகளைத் தரும் இந்த நிறுவனம் 2018-ல் தொடங்கப்பட்டது. கரீபியக்கடல் பகுதியில் உள்ள பிரிட்டிஷ்வர்ஜின் தீவு கூட்டத்தில் டர்டோலாஎனும் தீவில் இந்நிறுவனத்தின் தலைமையகம் உள்ளது. உலகில் எந்தெந்த மாநகரங்களில் அதிகசிசிடிவி கண்காணிப்பு இருக்கிறதுஎன்கிற வரைபடத்தை இந்த நிறுவனமே வெளியிட்டிருக்கிறது.
இதில் சதுர கிலோ மீட்டருக்கு657 கண்காணிப்பு கேமராக்களுடன் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. தற்போது சென்னையில் 2 லட்சத்து 80 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன.இந்த பட்டியலில் 2-ம் இடத்தை480 கேமராக்களுடன் ஐதராபாத்தும், 289 கேமராக்களுடன் டெல்லி 3-ம் இடத்தையும் பிடித்துள்ளன.
ஆசியா அல்லாத ஒரே நகரமானலண்டன் 399 கேமராக்களுடன் 4-ம் இடத்தைப் பிடித்துள்ளது. அடுத்த 6 இடங்களையும் சீனாவைச் சேர்ந்த நகரங்களே பிடித்துள்ளன. பட்டியலில் சீன தலைநகர்பெய்ஜிங் 10-ம் இடத்தில் உள்ளது.ஆனால் கண்காணிப்பு கேமராக்களின் மொத்த எண்ணிக்கையில்11 லட்சம் கேமராக்களுடன் பெய்ஜிங் நகரமே உலகின் முதலிடத்தில் உள்ளது.
காவல்துறைக்கு பெருமை
இந்திய நகரங்களில் 4 லட்சத்து 30 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. இதில், சென்னையில்மட்டுமே 2 லட்சத்து 80 ஆயிரம்கேமராக்கள் உள்ளன. இந்தகணக்கெடுப்பு விவரங்களால் சென்னை பெருநகர காவல்துறைக்கு உலக அளவில் கூடுதல்பெருமை கிடைத்துள்ளது. அதோடு கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதன் மூலம் குற்றங்களும் குறைந்து வருவதாக ஆய்வுமூலம் கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 2016-ம் ஆண்டுவரை 30 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்களே இருந்தன. சென்னை பெருநகர காவல் ஆணையராக 2017-ம் ஆண்டு ஏ.கே.விஸ்வநாதன் பொறுப்பேற்ற பின்னரே சென்னையில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியது. 2017-ம் ஆண்டு சென்னையில் கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கை 1 லட்சத்து35 ஆயிரமாகவும், 2018-ம் ஆண்டு 2 லட்சத்து 30 ஆயிரமாகவும், 2019-ம் ஆண்டு 2 லட்சத்து 70 ஆயிரமாகவும் உயர்ந்தது.
இதுகுறித்து, காவல் துறையின் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி.யாக இருக்கும் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:
நவீன வளர்ச்சிக்கு ஏற்ப குற்றங்களின் தன்மைகளும் மாறிவிட்டன. குற்றம் செய்பவர்களைக் கண்டுபிடிக்க பழைய நடைமுறைகள் கைகொடுக்கவில்லை. எனவே,இதற்கு மாற்று வழி குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் உதித்த சிந்தனைதான் கண்காணிப்பு கேமராக்கள். கண்காணிப்பு கேமராக்களால் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவும் முடியும்என்பதைப் புரிந்து கொண்டோம். இந்தத் திட்டம் குறித்து முதல்வரிடம் தெரிவித்தபோது, உடனே அதை செயல்படுத்தும்படி கூறினார்.
மேலும், இந்தத் திட்டத்துக்குபொதுமக்களின் ஆதரவு சிறப்பாக இருந்தது. காவலர்கள் முதல்அதிகாரிகள் வரை பொது மக்களிடம் நேரடியாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கண்காணிப்பு கேமராக்களால் திருட்டைத் தடுக்க முடியும், குற்றவாளிகளை அடையாளம் காண உதவும்என்பதை பொதுமக்கள் அறியத்தொடங்கியதும், ஏராளமானவர்கள் தங்களது வீடுகள், அலுவலகங்களில் வைக்கத் தொடங்கினர்.பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்ததால் மட்டுமே ‘மூன்றாவது கண்’ திட்டத்தை வெற்றிபெற வைக்க முடிந்தது.
இவ்வாறு ஏடிஜிபி ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.