Published : 07 Jan 2021 03:14 AM
Last Updated : 07 Jan 2021 03:14 AM

விருப்ப ஓய்வு கோரிக்கையை ஏற்று அரசு பணியில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விடுவிப்பு: எதிர்காலத் திட்டம் குறித்து அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்பு

சென்னை

ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் விருப்ப ஓய்வு கோரிக்கையை ஏற்று அவரை பணியில் இருந்து தமிழக அரசு விடுவித்துள்ளது. இந்நிலையில், அவரின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மிகுந்தஎதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மதுரையில் ஆட்சியராக இருந்தபோது கிரானைட் குவாரிவிவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். கடந்த 7 ஆண்டுகளாக அறிவியல் நகர துணைத்தலைவராக பணியாற்றி வந்தார். அவர், ஓய்வு பெற 3 ஆண்டுகள் உள்ள நிலையில், விருப்ப ஓய்வில் செல்ல முடிவு எடுத்தார்.

இதற்கான கடிதத்தை, கடந்தஆண்டு அக்.2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று அரசுக்கு அனுப்பினார். அப்போது அந்த கடிதத்தில், ‘சமூகத்துக்கு தான் நேர்மையாக செய்ய வேண்டிய பங்களிப்புக்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக’ தெரிவித்திருந்தார். அரசிடம் இருந்து பதில் வராத நிலையில், நவ.30-க்குள் தனக்கு விருப்ப ஓய்வு அளிக்கும்படி அக்டோபர் மாத இறுதியில் நினைவூட்டல் கடிதத்தை அனுப்பினார். இந்நிலையில், அவரை பணியில் இருந்து தமிழக அரசு விடுவித்து சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

திடீர் முடிவு ஏன்?

சகாயம், மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட்முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த நிலையில், அவர் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநராகவும் அதன்பின், இந்திய மருத்துவத் துறை இயக்குநர் என இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 2014-ம் ஆண்டில் தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 7 ஆண்டுகளாக தொடர்ந்து அதே பதவியில் நீடிக்கிறார்.

ஆனால், அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த, சமூக பங்களிப்புக்கான துறைகளின் பதவிகள் அளிக்கப்படவில்லை. மேலும், அவருடைய ‘பேட்ச் மேட்’ ஒருவருக்கு, புதிய ஐஏஎஸ் அதிகாரிகளை விட ஊதியம் குறைந்திருந்ததை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதனால் அவருக்கு ஊதியத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிலையில், சகாயத்துக்கான ஊதிய மாற்றம் செய்யப்படவில்லை என்பதும் அவருக்கு ஆதங்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இதுபோன்ற நிகழ்வுகளால்தான் அவர் விருப்ப ஓய்வு பெற முடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது.

அரசியலுக்கு வருவாரா?

சமீபத்தில், கர்நாடக ஐபிஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வுபெற்ற அண்ணாமலை பாஜகவிலும், அதேபோல் அதே மாநிலத்தில் ஐஏஎஸ் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் கட்சியிலும், தமிழக அரசில் தகவல் தொழில்நுட்ப செயலராக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற சந்தோஷ் பாபு, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திலும் இணைந்துள்ளனர். இந்த வரிசையில் தற்போது சகாயமும் பணியில் இருந்து விலகியுள்ளார்.

இதில் மற்றவர்களுக்கும் சகாயத்துக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில், இவர் பணியில் இருந்து விலகும் முன்பே, இவரை பின்பற்றுபவர்கள், ‘சகாயம் அரசியலுக்கு வரவேண்டும்’ என்று எதிர்பார்த்தனர்.

தற்போது, மக்கள் நீதி மய்யம்தலைவர் கமல்ஹாசன், ஊழலுக்குஎதிரான கோஷத்துடன் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க தேர்தல் களத்தை நோக்கி பயணிக்கிறார். ஆனால், சகாயத்தைப் பொறுத்தவரை, ‘லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்’ என்ற கோஷத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே, முன்வைத்தவர்.

தற்போது விருப்ப ஓய்வு பெற்றுள்ள சகாயம், அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து எந்தத் தகவலும் வெளியாகவில்லை.தொலைபேசியிலும் அவரைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. அவரது அடுத்தக் கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்து அவரது காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, சில மாதங்களுக்கு முன்பு அவரது நண்பர்கள் சிலர் கூறும்போது, ‘‘சகாயம்தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றுவார். அரசியலுக்கு வருவதற்கு அவருக்கு விருப்பமில்லை’’ என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x