

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கை, சென்னைமத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றி காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை சித்ரா. இவர் கடந்த மாதம் 9-ம் தேதி அதிகாலை சென்னை, நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில்தங்கி இருந்தபோது தூக்கிட்டுதற்கொலை செய்துகொண்டார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து நசரத்பேட்டை காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.
பிரேதப் பரிசோதனையின் அடிப்படையில் நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டது உறுதி செய்யப்பட்டது. தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை கடந்த மாதம் 14-ம் தேதி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆர்டிஒ விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தங்கள் மகளின்தற்கொலை வழக்கை சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றுசித்ராவின் தாயார் விஜயா, முதல்வரின் தனிப்பிரிவில் அண்மையில் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில், சித்ரா மரணம்தொடர்பாக வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்து, சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து நசரத்பேட்டை காவல் நிலைய போலீஸார் தங்களது விசாரணை அறிக்கை முழுவதையும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வசம் ஒப்படைத்தனர்.
“சித்ரா மரணம் தொடர்பான விவகாரம் குறித்து ஆரம்ப கட்டத்தில் இருந்தே விசாரணை நடத்தப்படும். விசாரணைக்கு தேவைப்படும் அனைவருக்கும் சம்மன் கொடுத்து நேரில் அழைத்து விசாரிப்போம். தேவைப்படும் பட்சத்தில் சைபர் கிரைம் போலீஸார் உதவியையும் நாட உள்ளோம்” என மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.