துணைவேந்தர் சுரப்பா மீதான முறைகேடு புகார்; ஆவணங்களை சமர்ப்பிப்பதில் அண்ணா பல்கலை. தாமதம்: விசாரணைக் குழு அதிகாரிகள் தகவல்

துணைவேந்தர் சுரப்பா மீதான முறைகேடு புகார்; ஆவணங்களை சமர்ப்பிப்பதில் அண்ணா பல்கலை. தாமதம்: விசாரணைக் குழு அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

துணைவேந்தர் சுரப்பா மீதான முறைகேடு புகார் விசாரணைக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதில் அண்ணா பல்கலை. தொடர்ந்து தாமதப்படுத்தி வருவதாக விசாரணைக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. சுரப்பா மீது புகார் தந்தவர்கள் நேரில் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் சுரப்பா மீது தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் கார்த்திக் சில புகார்களை தெரிவித்திருந்தார்.

விசாரணை ஆணையத்தில் நேற்று அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எனது தரப்பில் இருந்த ஆதாரங்களை அளித்து வாக்குமூலமும் தந்துள்ளேன். இந்த விசாரணை முடிவில் சுரப்பா எந்த அளவு நேர்மையானவர் என்பது தெரியவரும். அவரின் பல செயல்பாடுகளால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உதாரணமாக 23 லட்சம் அரியர் மாணவர்களிடம் தேர்வுக் கட்டணம் வசூலித்து விட்டனர். ஆனால், அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. அதன்படிதேர்வுக் கட்டண வசூல் முறைகேடுகள் குறித்தும் ஆணையம் விசாரணை செய்துவருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஆணையம் கேட்கும் ஆவணங்களை வழங்குவதில் பல்கலை. தரப்பு தாமதப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரணைக்கு குழு அதிகாரிகள் சிலர்கூறும்போது, ‘‘3 மாதத்தில் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், விசாரணைக்குத் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பதில் அண்ணா பல்கலை. தொடர்ந்து தாமதம் செய்துவருகிறது. நீண்ட வலியுறுத்தலுக்கு பிறகே உரிய ஆவணங்களை வழங்குகின்றனர்.

மேலும், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்ந்த அலுவல்களில் சில குளறுபடிகள் நடைபெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது. எனவே, மேலும் சில அலுவலர்களை அழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in