

சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 தங்கம் மாயமான விவகாரத்தில் அறிவியல் பூர்வமாக விசாரணை நடந்து வருகிறது என்று சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலிப் தெரிவித்துள்ளார்.
சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் சுரானா என்ற தங்கம் இறக்குமதி செய்யும் நிறுவனம் உள்ளது. தங்கம் இறக்குமதியில் மோசடி நடைபெற்றதாக கூறி, கடந்த 2012-ம் ஆண்டு சிபிஐ அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தி, 400 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். அதை சுரானா நிறுவனத்தில் உள்ள 72 லாக்கர்களில் வைத்து சீல் வைத்தனர். இந்நிலையில் சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்தபோது 296 கிலோதங்கம் மட்டுமே இருந்தது. 103 கிலோ 864 கிராம் எடையுள்ள தங்கத்தைக் காணவில்லை. இதுகுறித்த வழக்கைசிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலிப், ஐஜி சங்கர் ஆகியோர் சுரானாநிறுவனத்துக்கு நேற்று நேரில் வந்து ஆய்வு செய்தனர். தங்கம் மாயமான லாக்கர்களை பார்த்து ஆய்வு செய்தனர். சுமார் ஒரு மணி நேரம் இந்த ஆய்வு நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலிப், “தங்கம் மாயமான விவகாரம் குறித்து அறிவியல் பூர்வமாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம்” என்றார்.
சுரானா நிறுவனத்தில் 3 தளங்களில் உள்ள லாக்கர்களிலும் தடயவியல் துறை நிபுணர்கள் நேற்று ஆய்வு நடத்தினர். காலையில் தொடங்கிய ஆய்வு மாலை வரை நீடித்தது. இதில், தங்கம் திருடப்பட்ட வழி குறித்து சில தகவல்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.