

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன் (65). திருமணம் முடிந்த சில மாதங்களில் குடும்பத்தை பிரிந்து மும்பை சென்றார். அங்கு வேலை கிடைக்காததால், யாசகம் பெறத் தொடங்கினார். பின்னர் ஊருக்கு திரும்பியவரை குடும்பத்தினர் வீட்டில் சேர்க்கவில்லை. தொடர்ந்து யாசகம் பெற்று வந்தவர், செலவுபோக மீதி பணத்தை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பல மாநிலங்களிலுள்ள பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலிகள், கண்காணிப்பு கேமராக்கள், குடிநீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் வாங்க வழங்கியுள்ளார். பள்ளிகுழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வாங்கிக் கொடுத்துள்ளார். ஊரடங்கின்போது மதுரையில் யாசகம் பெற்ற பணம் ரூ.2.70 லட்சத்தை கரோனா தடுப்பு நிதியாக பல தவணைகளில் மதுரை ஆட்சியரிடம் வழங்கினார்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் யாசகம் பெற்ற தொகையில் ரூ.10 ஆயிரத்தை திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கரோனா நிவாரண நிதியாக வழங்கினார். அதற்கான ரசீதை, பெற்றுக்கொண்டார்.