

மருத்துவக் கல்லூரி வழக்கில் விரைவில் நீதி கிடைக்கும் என முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 2008-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் நான் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, லக்னோ மற்றும் இந்தூர் மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரத்தை புதுப்பித்து வழங்கியதில் விதிமீறல்கள் நடந்ததாகக் கூறி சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் முதல்கட்ட விசாரணையிலும், முதல் தகவல் அறிக்கையிலும் எனது பெயர் இல்லை. ஆனால், 2012-ல் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில் அரசியல் காரணங்களுக்காக எனது பெயர் சேர்க்கப்பட்டது.
அடிப்படை ஆதாரம் இல்லாமல் தொடரப்பட்ட இந்த வழக்கிலிருந்து எனது பெயரை நீக்கக் கோரி விடுவிப்பு மனு தாக்கல் செய்தேன். இந்த மனு இன்று (அக். 7) நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணை வழக்கமான நடைமுறைதான். இந்த வழக்கில் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் இது எந்த வகையிலும் பின்னடைவை ஏற்படுத்தாது.
இதனை எதிர்த்து சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். அதன் முடிவில் எனக்கு நீதி கிடைக்கும். வழக்கிலிருந்து வெளிவருவேன் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. இது போன்ற வழக்குகளின் மூலம் எங்களின் செயல்பாடுகளை முடக்கி முடியாது. ஊழலுக்கு எதிரான பாமகவின் பயணம் முன்பை விட அதிக வேகத்தில் தொடரும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.