

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தவறான தகவல்களுடன் கூடிய பதாகையை, திருப்பூர் மாவட்ட சுற்றுலாத் துறை வைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றுலாத் துறை சார்பில் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் பிரதானக் கோயில்களை உள்ளடக்கிய பகுதிகளை குறிப்பிட்டு அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு குறிப்பிடப்பட்டுள்ள தொலைவு தவறாக இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்கள்கூறியதாவது: ஆட்சியர் அலுவலகத்தின் பிரதான பகுதியில் சுற்றுலாத் துறை சார்பில் அறிவிப்புப் பதாகைவைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களை குழப்பும் வகையில் பல்வேறு பகுதிகளின் தொலைவு குறிப்பிடப்பட்டுள்ளது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் 11 கி.மீ. எனவும், அவிநாசிக்கு முன்பாக உள்ள திருமுருகன்பூண்டி கோயிலுக்கு 12 கி.மீ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
காங்கயம் 42 கி.மீ. என்றும், காங்கயத்துக்கு முன்பாக உள்ள சிவன்மலை 43 கி.மீ. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத்தலமான பஞ்சலிங்க அருவி 78 கி.மீ. என்றும் அதற்கு முன்பாக உள்ள திருமூர்த்தி அணை 90 கி.மீ. என்றும், அமணலிங்கேஸ்வரர் கோயில் 91 கி.மீ. என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொல்லியல் சிற்பங்களும், கல்வெட்டுகளும் உள்ள பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோயில், தாராபுரம் அனுமந்தராயர் கோயில்,சாமளாபுரம் அருகே வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் உள்ளிட்ட மாவட்டத்தின் முக்கிய இடங்கள் இதில் இடம்பெறவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்டஉதவி சுற்றுலா அலுவலர் செல்வராஜ் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது ‘‘சுற்றுலாத் துறை சார்பில் சமீபத்தில்தான் அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது. தவறுதலாக இடம் பெற்ற சுற்றுலாத் தலங்களின் தொலைவை உடனடியாக மாற்றுகிறோம்’’ என்றார்.