Published : 07 Jan 2021 03:15 AM
Last Updated : 07 Jan 2021 03:15 AM

தற்காப்புக்காக உறவினர் கொலை: கைது நடவடிக்கையிலிருந்து இளம்பெண் விடுவிப்பு

சோழவரம் அருகே பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்ற உறவினரை, தற்காப்புக்காக கொலை செய்த இளம்பெண் கைது நடவடிக்கையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே உள்ள அல்லிமேடு பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண், கடந்த 2-ம் தேதி மாலை அல்லிமேடு பகுதியில் உள்ளகுதிரை பண்ணை அருகேசென்றபோது, அப்பெண்ணின் உறவினரான அஜித் என்றகிளி அஜித்(25) மதுபோதையில், பின்தொடர்ந்து சென்று, கத்தியைக் காட்டி மிரட்டி தவறாக நடக்க முயன்றார்.

இதனால், அந்த பெண்,அஜித்தை பலமாக தள்ளியதில், பின்னால் இருந்த பனைமரத்தில் மோதி கீழே விழுந்தார். தொடர்ந்து, அஜித்திடமிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில், அஜித்திடம் இருந்து பறித்த கத்தியால் அவரின் கழுத்தில் பலமாக வெட்டியுள்ளார். இதில், அஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தொடர்ந்து, அந்த பெண் சோழவரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

இதுகுறித்து திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன் கூறும்போது, “சோழவரம் போலீஸார் அந்த பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் தற்காப்புக்காக அந்த பெண் கொலைசெய்தது தெரியவந்தது.

ஆகவே, அந்தப் பெண் மீதான கொலை வழக்கு, தற்காப்புக்கான கொலை வழக்காக (இந்திய தண்டனை சட்டப் பிரிவு-100)மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, தொடர்புடைய இளம்பெண் கைது நடவடிக்கை யிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இக்கொலை தொடர்பாக இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x