

தேமுதிக மாவட்ட நிர்வாகிகளை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்த நிலையில், அடுத்தகட்ட அரசியல் வியூகத்தை வகுப்பதற்காக 'உங்களுடன் நான்' என்ற நிகழ்ச்சியை விஜயகாந்த் ஏற்பாடு செய்துள்ளார்.
மலேசியா சென்றிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சனிக்கிழமை இரவு சென்னை திரும்பினார். நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருந்து 14 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக, ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை.
கடந்த மாதம் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களை அழைத்து விஜயகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார். தேமுதிக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களையும் மாவட்டச் செயலாளர்களையும் தனித் தனியாக சந்தித்து கருத்துகளை கேட்டறிந்தார்.
இதற்கிடையே, விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் 'சகாப்தம்' படத்தின் பாடல் காட்சிகளை வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டிருந்தனர். இதற்காக விஜயகாந்த், மனைவி பிரேமலதா வுடன் கடந்த 10-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்றார். 10 நாட்களுக்கு மேலாக அங்கு தங்கியிருந்த விஜயகாந்த், சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் சென்னை திரும்பினார்.
இதன் தொடர்ச்சியாக, கட்சியில் அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கோள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 'உங்களுடன் நான்' என்று மாவட்ட நிர்வாகிகளுடனான சந்திப்புக்கு பெயர் வைத்திருப்பது, அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு இருந்த கலக்கத்தைப் போக்கியுள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக தேமுதிக கட்சி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் 'உங்களுடன் நான்' என்ற நிகழ்ச்சியின் மூலம் வருகின்ற 26-ம் தேதி முதல் ஜூலை 4 வரை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேமுதிகவின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை விஜயகாந்த் நேரில் சந்தித்து கலந்தாலோசனை நடத்தவுள்ளார்.
மேலும், தங்கள் மாவட்டத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு அந்தந்த மாவட்டத்தை சார்ந்த கழக அணி நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றியம், நகரம், பகுதி, பேரூராட்சி, ஊராட்சி, வட்டம், வார்டு, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுகிறது.
கூட்ட அரங்கிற்கு வரும்பொழுது கண்டிப்பாக தலைமை கழகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள கழக உறுப்பினர் அட்டையையும், தங்களுடைய மாவட்ட கழகத்தின் மூலம் வழங்கப்பட்ட அனுமதி அட்டையையும் கொண்டு வரவேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.