

சார்பு ஆய்வாளர் பணித் தேர்வில் தமிழ்வழி இட ஒதுக்கீடு கேட்டவர்களில் எத்தனை பேர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழக காவல்துறையில் சார்பு ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு 2019 மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தேன். எழுத்துத்தேர்வில் 70-க்கு 51 மதிப்பெண் பெற்றேன். உடல்திறன் தேர்வில் 15-க்கு 12 மதிப்பெண் பெற்றேன்.
டிச. 1-ல் பொதுப்பிரிவில் தேர்வு செய்யப்பட்டவர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஒரு பணியிடத்துக்கு இருவர் வீதம் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். என்னை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவில்லை.
நான் சார்ந்த எம்பிசி பிரிவுக்கு கட்ஆப் மதிப்பெண் 64. நான் 63 மதிப்பெண் பெற்றேன். எனக்கு தமிழ் வழிக்கல்வி சலுகை வழங்கியிருந்தால் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருப்பேன்.
எனவே சார்பு ஆய்வாளர் தேர்வில் ஒவ்வொரு நிலையிலும் தமிழ் வழிக்கல்வி சலுகை வழங்க உத்தரவிட வேண்டும். அதன்படி எனக்கு தமிழ் வழிக்கல்வி சலுகை வழங்கி நேர்முகத் தேர்வுக்கு அழைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை உத்தேச தேர்வு பட்டியலுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது போது, சார்பு ஆய்வாளர் பணி நியமனத்துக்கான உத்தேச தேர்வு பட்டியலுக்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், சார்பு ஆய்வாளர் தேர்வின் இறுதியில் தான் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும். சுமார் 13 ஆயிரம் பேர் தமிழ் வழி ஒதுக்கீட்டில் விண்ணப்பித்துள்ளனர். 50 சதவீத நேர்காணல் முடிந்துள்ளது.
நீதிமன்றத் தடையால் நேர்முகத் தேர்வு நடைமுறைகள் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையடுத்து, நீதிபதிகள், தமிழ்வழி இட ஒதுக்கீடு கேட்டவர்களில் எத்தனை பேர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன. 11க்கு ஒத்திவைத்தனர்.