

சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் கைதான சாத்தான்குளம் தலைமைக் காவலர் தாமஸ் பிரான்சிஸ் இடைக்கால ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவுக்கு சிபிஐ நாளை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பெனிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் சிறப்பு எஸ்.ஐ. பால்ராஜ் காலமாகிவிட்ட நிலையில் மற்ற 9 பேரும் மதுரை சிறையில் உள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் தாமஸ் பிரான்சிஸ் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், மனுதாரர் சகோதரருக்கு மெய்ஞானபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்தில் பங்கேற்பதற்காக மனுதாரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.
மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதி, மனுதாரர் சகோதரர் திருமணம் தொடர்பாக உரிய ஆவணங்களை தாக்கல் செய்யவும், சிபிஐ பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.