

காவேரி - குண்டாறு திட்டத்தால் மதுரைக்கு தண்ணீர் வராது என்று நீர் வழிச்சாலைத்திட்ட பொறியாளர் ஏ.சி.காமராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசு ரூ.14,000 கோடியில் ‘காவிரி – குண்டாறு’ திட்டம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மதுரைக்கோ, திருமங்கலத்திற்கோ குடிநீர் கிடைக்காது. இத்திட்டத்தில் மேட்டூர் நிறைந்து தண்ணீர் உபரியாக வெளியற்றப்படும்போதுதான் தண்ணீர் வரும்.
ஆனால், ஏராளமான பலன் கொடுக்கக் கூடிய தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலைத் திட்டத்திற்கு தமிழ்நாடு ரூ.1,000 கோடி செலவு செய்தாலே போதும்.
அதிலும் காவிரியில் லட்சக்கணக்கான கனஅடி தண்ணீர் வரும்பொழுது வெறும் 6,000 கன அடி தண்ணீர் இதில் மட்டுமே எடுக்க முடியும். இத்திட்டத்தில் அதிக தண்ணீரைத் தேக்கவும் வாய்ப்பில்லை.
ஆனால், ‘தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலை’ திட்டத்தின் படி தமிழகத்திலுள்ள அனைத்து ஆறுகளும் இணைக்கப்படும். எந்த ஆற்றில் உபரி நீர் இருந்தாலும் எடுத்துக்கொள்ளப்படும்.
இத்திட்டத்திற்கு மத்திய அரசு 90 சதவீதம் மானியம் கொடுக்கும். மின்சாரம் நீர்வழிச்சாலை கிடைப்பதால் தனியார் முதலீட்டையும் பெறமுடியும்.
திட்டத்திற்கு தேவை பல ஆயிரம் கோடி. ஆயினும், தமிழக அரசுக்கு செலவு என்பது இருக்காது. அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் திட்ட ஆய்விற்கு அதிகமாக ரூ.1,000 கோடி செலவு செய்தாலே போதும். பின் அந்தப் பணமும் தமிழக அரசிற்கு கிடைத்துவிடும்.
நவீன நீர்வழிச்சாலை மூலம் மதுரை திருமங்கலம், விருதுநகருக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்க முடியும்.
அதேபோல சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, ராமநாதபுரம் முதலிய மாநகரங்களுக்கு குடிநீர் வழங்க முடியும். காவிரி குண்டாறு திட்டம் மூலம் ராமநாதபுரம் முதலிய பகுதிக்கு தாராளமாகத் தண்ணீர் கிடைக்கும் என்கிறார்கள்.
அப்படியானால் ரூ.1,700 கோடி செலவு செய்து காவிரி குடிநீர் திட்டம் ஏன் ? ஆனால் தமிழக அரசு அத்திட்டத்தையும் செயல்படுத்த விரும்புகிறது.
தமிழக அரசுக்கு (அதாவது மக்களின் வரிப்பணத்தில் அதிக செலவில்லாமல்) அதிக பலன் கிடைக்கும் முன்னாள் முதல்வர் மாண்புமிகு செல்வி. ஜெயலலிதா அவர்கள் எடுத்து செயல்படுத்த உறுதி அளித்த, தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலைத் திட்டம் வேண்டுமா? அதிகப் பணம் செலவு செய்து குறைந்த பலன் கிடைக்கும் காவிரி குண்டாறு திட்டம் வேண்டுமா? தமிழக மக்கள் முடிவு எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.