

சிவகங்கை நகராட்சியில் பாதாளச் சாக்கடை அடைப்பை எடுக்க சென்னை மாநகராட்சியில் இருந்து கழிவுநீர் உறிஞ்சும் அதிநவீன இயந்திரம் கொண்டு வரப்பட்டுள்ளது.
சிவகங்கை நகராட்சியில் ரூ.31.30 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் பணி நடந்து வருகிறது. இப்பணி குழாய் பதித்தல், சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், வீடுகளுக்கு இணைப்பு கொடுத்தல் ஆகிய 3 கட்டங்களாக நடந்தது.
மேலும் கழிவுநீரை பம்பிங் செய்து முத்துப்பட்டியில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல மருதுபாண்டியர் நகர், மானாமதுரை ரோடு ஆகிய இடங்களில் நிரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இப்பணி 2009-ம் ஆண்டு முடிந்திருக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் இதுவரை முழுமையாக பயன்பாட்டிற்கு வரவில்லை. தற்போது 27 வார்டுகளில் 5 வார்டுகளில் மட்டுமே பாதாளச் சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது.
பயன்பாட்டிற்கு வராத மற்ற வார்டுகளில் முறையான பராமரிப்பு இல்லாததால் பல இடங்களில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் பெய்த தொடர் மழையில் தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடியது. இதனால் பொதுமக்கள் நடமாட முடியாமல் சிரமப்பட்டனர்.
இதையறிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி தான் ஏற்கனவே பணிபுரிந்த சென்னை மாநகாட்சியில் இருந்து ரூ.6 கோடி மதிப்புள்ள உறிஞ்சும் அதிநவீன இயந்திரத்தை வரவழைத்துள்ளார்.
இந்த இயந்திரம் பாதாளச் சாக்கடையில் இருந்து உடனுக்குடன் கல், மண் போன்ற அடைப்புகளை எடுத்து வெளியேற்றி வருகிறது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில வார்டுகளில் அவரவர் தங்களது இஷ்டத்திற்கு பாதாளச் சாக்கடையுடன் வீடுகளுக்கு இணைப்பு கொடுத்துள்ளனர். பயன்பாட்டிற்கு வராத 22 வார்டுகளில் 60 இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
அவற்றை நவீன இயந்திரம் மூலம் அகற்றி வருகிறோம். இப்பணி முடிந்ததும் பாதாளச் சாக்கடை திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும், என்று கூறினார்.