கடன் செயலிகளின் செயல்பாடுகளை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து

கடன் செயலிகளின் செயல்பாடுகளை ஏற்க முடியாது: உயர் நீதிமன்றம் கருத்து
Updated on
1 min read

கடனைத் திரும்ப வசூலிக்க மூன்றாம் தர நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கடன் செயலிகளின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

செல்போன் செயலிகள் வழியாக கடன் வழங்குவது அதிகரித்துள்ளது. மணிடாப், பேசென்ஸ் தானி, இந்தியாலென்ட்ஸ், கிரடிட்பீ, நிரா, கேஸ் இ, கேபிடல் பர்ஸ்ட், கிரடி, மணி வியூ, ஏர்லி சாலரி, ஸ்மார்ட் காயின், ஹோம் கிரடிட், லாசிபே, எனிடைம் லோன்ஸ், எம்பாக்கெட், பிளக்ஸ்சேலரி, பானான்பின்சர்வ், ரூபிலென்ட், பேமிஇந்தியா லோன்டாப், ஸ்டேஷ்பின் உள்ளிட்ட பல செயலிகள் வழியாக கடன் வழங்கப்படுகிறது.

இந்த செயலிகள் ரிசர்வ் வங்கி அனுமதி இல்லாமல் செயல்படுகின்றன. கடன் வழங்குவதற்கு எந்த சட்ட திட்டங்களையும் பின்பற்றுவதில்லை. கடனுக்கு அதிகப்படியான வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடனை சரியாக செலுத்தாவிட்டால் அவர்களின் புகைப்படங்களை வாட்ஸ்அப் வழியாக பிற உறுப்பினர்களுக்கு பகிர்வது, செல்போனில் தொடர்பு கொண்டு தவறாக பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களும் நடைபெறுகின்றன. இதனால் செயலி வழியாக கடன் பெற்ற பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

எனவே கூகுள் இந்தியா, பேசென்ஸ் இணையதளங்கள் வழியாக ரிசர்வ் வங்கி அனுமதியில்லாமல் செயலி வழியாக கடன் வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும். மேலும், ரிசர்வ் வங்கி அனுமதியில்லாமல் செயலி வழியாக கடன் வழங்குவதில் நடைபெறும் மோசடி குறித்து விசாரிக்கவும், வழியாக கடன் வழங்குவதை முறைப்படுத்தி, கண்காணிக்க வழிமுறைகளை வகுக்கவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ். ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் ஏ.கண்ணன், எஸ்.பாஸ்கர்மதுரம் வாதிட்டனர்.

விசாரணையின் போது நீதிபதிகள், தற்போது செயலிகள் மூலம் கடன் பெற்று தற்கொலை செய்து கொள்வது முக்கிய பிரச்சினையாக உள்ளது. செயலி மூலம் கடன் வழங்குபவர்கள் அவர்களுக்கான விதிமுறைகளை அவர்களே உருவாக்கியுள்ளனர்.

கடனைத் திரும்ப வசூலிக்க ஏற்றுக்கொள்ள முடியாத வழிமுறைகளை பின்பற்றுகின்றனர். இது சட்டத்துக்கு உட்பட்டு நடைபெறுவதில்லை. சட்டத்தால் ஏற்றுக்கொள்ளும்படியும் இல்லை.

கடனைத் திரும்ப வசூலிக்க மூன்றாம் தர நடவடிக்கைகள் மேற்கொள்வதை ஏற்க முடியாது. அங்கீகரிக்கப்படாத செயலி வழியாக கடன் வாங்குவோர் மூலமாக சட்டவிரோத செயல்களும் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது என்றனர்.

பின்னர் மத்திய நிதித்துறை செயலர், ரிசர்வ் வங்கி, கூகுள் இந்தியா நிறுவனம், பேசென்ஸ் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.3-ம் தேிதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in