Published : 06 Jan 2021 05:47 PM
Last Updated : 06 Jan 2021 05:47 PM

முதியோர் பென்சன் வழங்குவதில் முறைகேடு: அதிமுக அரசு மீது பழனிவேல் தியாகராஜன் எம்எல்ஏ குற்றச்சாட்டு

முதியோர் பென்சன் திட்டத்தை பொறுத்தவரை ஒரு பயனாளி இறந்தால் மட்டுமே மற்றொரு பயனாளி பயனடைவோர் பட்டியலில் சேர்க்கப்படுவது அதிமுக அரசின் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது என திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தெற்கு மாவட்ட திமுக சார்பில் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 77-வது வார்டு ஆண்டாள்புரம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சபை கூட்டத்தில் தலைமை வகித்து உரையாற்றிய மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன், தமிழகம் இதுவரை காணாத வரலாற்றில் இல்லாத வகையில் கொடூரமான ஆட்சி நடைபெற்று வருகிறது .

லஞ்சம் ,ஊழலுக்காக மட்டுமே உள்ளாட்சி தேர்தலை இந்த அரசு நடத்தவில்லை .மக்கள் பிரதிநிதி ஒருவரிடம் கூட கலந்தாலோசிக்காமல் 1280 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை மிக மோசமான முறையில் நடத்தி வருகின்றனர்.

முதியோர் பென்சன் திட்டத்தை பொறுத்தவரை ஒரு பயனாளி இறந்தால் மட்டுமே மற்றொரு பயனாளி பயனடைவோர் பட்டியலில் சேர்க்கப்படுவது அதிமுக அரசின் எழுதப்படாத சட்டமாக இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் தமிழக அரசின் நிதி நிலையை கஜானாவை திவாலாக்கிவிட்டார்கள் .

இதுவரை மதுரை மத்திய தொகுதியில் மட்டும் 480 மனுக்கள் முதியோர் உதவி தொகைக்காக எம்எல்ஏ என்ற முறையில் பரிந்துரை செய்து மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ளேன் .ஆனால் 25 பயனாளிகளுக்கு மட்டுமே முதியோர் உதவித்தொகை கிடைத்துள்ளது எனக் கூறினார்.

.பொதுமக்களோடு கலந்துரையாடிய அவர் 77 வது வார்டில் தாம் நிறைவேற்றி தந்துள்ள திட்டப்பணிகளை பட்டியலிட்டார்.

இதுவரை இப்பகுதிக்கு 46 முறை தாம் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்தது பற்றியும் ,சுமார் 1 கோடி அளவில் இப்பகுதிக்கு மட்டுமே திட்டப்பணிகளை நிறைவேற்றி தந்துள்ளதாகவும் கூறினார்.

இக்கூட்டத்தில் பகுதி செயலாளர் மிசா பாண்டியன்,வட்ட செயலாளர் மாணிக்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x