

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜனவரி மாதத்தில் கடும் மழை பெய்தது நூறாண்டுகளுக்குப் பின் பெய்த அதிகபட்ச மழை அளவு என 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் பதிவிட்டுள்ளார்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று முன் தினம் நள்ளிரவு முதலே தொடர்ந்து கனமழை பெய்தது. 15 மணி நேரத்திற்கும் மேலாகப் பெய்த கனமழையால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
காலை முதலே சாலையெங்கும் தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் பணிக்குச் செல்ல முடியாமல் பாதிப்புக்குள்ளாகினர். மழை இன்னும் மூன்று நாட்களுக்குத் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.
கடந்த 105 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதத்தில் 4 மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் 21 செ.மீ. மழையும், அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), தாம்பரம் (செங்கல்பட்டு) பகுதிகளில் தலா 16 செ.மீ. மழையும் பதிவானது. சென்னை எம்ஜிஆர் நகரில் 15 செ.மீ., சோழிங்கநல்லூர் (சென்னை), மயிலாப்பூர் (DGP அலுவலகம்) பகுதிகளில் தலா 14 செ.மீ., செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), பூவிருந்தவல்லி (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), தரமணி Arg (சென்னை), சென்னை விமான நிலையம் (சென்னை) ஆகிய பகுதிகளில் தலா 13 செ.மீ. மழை பதிவானது.
குறைந்தபட்ச மழை அளவே 6 செ.மீ. என்கிற அளவில் மழை கொட்டித் தீர்த்தது.
இதுகுறித்து 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் எழுதி, வெளியிட்ட பதிவு:
புயல் இல்லை, காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இல்லை, காற்றழுத்தத் தாழ்வு நிலை இல்லை. ஆனால், ஜனவரி மாதத்தில் நாம் பெறும் மழைப்பொழிவைவிட 7 மடங்கு அதிமான மழைப்பொழிவை நேற்று பெய்த 15 மணி நேர மழையினால் பெற்றோம்.
கடந்த 105 ஆண்டுகளில் சென்னை நகரம் (நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம்) பெற்ற மழை அளவு:
* கடைசியாக 106 ஆண்டுகளுக்கு முன் 1915-ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி சென்னை நகரத்தில் பெய்த சராசரி மழை அளவு 21.2 செ.மீ.
* நேற்று பெய்த சராசரி மழை அளவு சென்னையில் மட்டும் 12.3 செ.மீ. இது செங்கல்பட்டில் அதிகம். (சென்னை மாநகராட்சி பதிவு)
* 02.01.1920-ம் ஆண்டு சராசரி 9.9 செ.மீ. மழை பெய்துள்ளது.
* 05.01.1903-ம் ஆண்டு சராசரி 8.2 செ.மீ. மழை பெய்துள்ளது.
* 13.01.1986-ம் ஆண்டு சராசரி 6.6 செ.மீ. மழை பெய்துள்ளது.
* புத்தாண்டு அன்று 1909-ம் ஆண்டு 6.6 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.