

துணைநிலை ஆளுநருக்கு எதிராக காங்கிரஸும், முதல்வர் வீட்டை பாஜகவும் முற்றுகையிட உள்ளதாக அறிவித்த நிலையில், துணை ராணுவப்படை புதுச்சேரி வந்துள்ளது. இச்சூழலில் புதுச்சேரியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்களும், பாஜகவின் நியமன எம்எல்ஏக்களும் ஒரே அறையில், ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்தது. அதேபோல, நாராயணசாமியின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று பாஜகவும் அறிவித்திருப்பதால், புதுச்சேரியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. துணை ராணுவமும் வந்துள்ளது.
இந்தச் சூழலில்தான் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அரசு கொறடா அனந்தராமன், காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார், பாஜகவின் நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன் (புதுச்சேரி பாஜக தலைவர்), சங்கர் அனைவரும் ஒரே அறையில் அமர்ந்துகொண்டு உணவருந்தும் புகைப்படம் தற்போது புதுச்சேரியில் பரவி வருகிறது. கட்சித் தொண்டர்கள் இதை விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் - பாஜக தரப்பில் விசாரித்தபோது, "ஏனாம் பிராந்தியத்தின் எம்எல்ஏவும், தற்போதைய அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் புதுச்சேரி சட்டப்பேரவை சார்பில் சிறந்த எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அத்துடன் தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் எம்எல்ஏவாகப் பணியாற்றிய அவருக்கு இன்று (ஜன.06) இரவு ஏனாமில் பாராட்டு விழா நடக்கிறது.
இதற்காக ஏனாமுக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆகியோர் சென்றுள்ளனர். முக்கியமாக, பாஜகவைச் சேர்ந்த நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன் (மாநிலத்தலைவர்), சங்கர் ஆகியோரும் சென்றுள்ளனர். ஓய்வறையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களும், பாஜக எம்எல்ஏக்களும் அமர்ந்து உணவு சாப்பிட்டுப் பேசுகின்றனர்" என்று தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமியும் காங்கிரஸ் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு வாழ்த்து தெரிவித்துப் புகழ்ந்தார்.
ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சித்து வருவதுடன் காங்கிரஸ் கூட்டங்களைப் புறக்கணித்து வந்த திமுக தரப்பிலிருந்து அக்கட்சி எம்எல்ஏ கீதா ஆனந்தனும் ஏனாம் சென்றுள்ளார். அதிமுக எம்எல்ஏக்கள் மட்டும் இந்நிகழ்வுக்குச் செல்லவில்லை. பாராட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு அனைவரும் நாளை (ஜன.07) புதுச்சேரி திரும்புகின்றனர்.