

சிவகங்கையில் பொதுப்பணித்துறை வைகை - பெரியாறு பாசன தலைமை பொறியாளர் வராததைக் கண்டித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 129 கண்மாய்களுக்குட்பட்ட 6,038 ஏக்கர் நிலங்கள் ஒருபோக பாசன வசதி பெறுகின்றன. செப்.27-ம் தேதி வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட பெரியாறுநீர் சிவகங்கை மாவட்டத்திற்கு முறையாக வழங்கவில்லை. இதை கண்டித்து இன்று (ஜன.7) சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக விவசாயிகள் அறிவித்தனர்.
சில தினங்களுக்கு முன்பு கோட்டாட்சியர் முத்துக்கழுவன் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். முடிவு எட்டாதநிலையில் நேற்று மீண்டும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பி.மதுசூதன் தலைமையில் சமாதானக் கூட்டம் நடந்தது. இதில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர், உதவி செயற்பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆனால் தலைமை பொறியாளர் பங்கேற்கவில்லை. தலைமை பொறியாளர் வராததை கண்டித்து பெரியாறு பாசன விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
கூட்டத்திற்கு பிறகு ஐந்து மாவட்ட பெரியாறு பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் அன்வர் கூறுகையில், ‘‘ மேலூர் பகுதியில் தண்ணீர் திறக்கும்போதே சிவகங்கை மாவட்டத்திற்கும் திறக்க வேண்டும். கட்டாணிப்பட்டி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு கால்வாய்களில் வினாடிக்கு 30 கன அடி, 48-வது மடைக் கால்வாயில் 35 முதல் 40 கன அடி, லெசிஸ், ஷீல்டு கால்வாய்களில் 50 கன அடி என்ற வகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் திறக்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.
மேலும் இப்பிரச்சினைக்கு பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மட்டுமே தீர்வு காண முடியும். ஆனால் நாங்கள் பலமுறை வலியுறுத்தியும் அவர் வரவில்லை. அதனால் வெளிநடப்பு செய்தோம். மேலும் திட்டமிட்டப்படி முற்றுகை போராட்டம் நடக்கும், என்று கூறினார்.