

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விரைவாகச் செயல்பட்டு எஞ்சிய குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை அருகே, பொள்ளாச்சியில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக, பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகியோரைக் கடந்த 2019-ம் ஆண்டு சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இதற்கிடையே, பாலியல் புகார் அளித்த பெண்ணின் சகோதரரைத் தாக்கிய வழக்கு தொடர்பாக 'பார்' நாகராஜ் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
மேற்கண்ட இரண்டு வழக்குகளையும் சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே வழக்கின் தன்மை கருதி, மேற்கண்ட இரண்டு வழக்குகளும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐக்கு மாற்றப்பட்டது. மேற்கண்ட இரண்டு சம்பவங்கள் தொடர்பாக சிபிஐ புலனாய்வுப் பிரிவினர் புதியதாக வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து சிபிஐ ஐஜி மற்றும் கூடுதல் எஸ்.பி. உள்ளிட்ட சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சிக்கு வந்து விசாரணை நடத்தினர். மேற்கண்ட 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் தாங்கள் பதிவு செய்த வழக்குத் தொடர்பாக மீண்டும் அப்போது கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமும் விசாரணை நடத்தினர். தவிர, இந்த வழக்குத் தொடர்பான முதல்கட்ட குற்றப்பத்திரிகையும் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகளால் தாக்கல் செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அதேசமயம், மேற்கண்ட வழக்கில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் 3 பேர் கைது
இந்நிலையில், மேற்கண்ட பாலியல் வழக்குத் தொடர்பாக, பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி அருகேயுள்ள சங்கம்பாளையத்தைச் சேர்ந்த ஹேரேன்பால் (29), பொள்ளாச்சி வடுகபாளையத்தில் உள்ள விகேவி லேஅவுட்டைச் சேர்ந்த பாபு என்ற 'பைக்' பாபு (27), பொள்ளாச்சி வடுகபாளையத்தைச் சேர்ந்த அருளானந்தம் (34) ஆகிய மூவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று (ஜன.5) மாலை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
பாலியல் வழக்கு, அது தொடர்பான அடிதடி வழக்கு உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் விசாரித்தனர்.
அதன் இறுதியில் மேற்கண்ட மூவரையும் சிபிஐ அதிகாரிகள் நேற்று நள்ளிரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அருளானந்தம் அதிமுக பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளராக உள்ளதோடு, கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். தற்போது, இவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 'பைக்' பாபு இருசக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
கைது செய்யப்பட்ட மூன்று பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின்னர், இன்று (ஜன.06) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது தொடர்பாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தன் ட்விட்டர் பக்கத்தில், "தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் மூன்று பேர், 2 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், சிபிஐ விரைவாக செயல்பட்டு எஞ்சிய குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும்.
அப்பாவிப் பெண்கள் பாதிப்புக்கு ஆளாவதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தாமதமின்றி உரிய நீதி கிடைக்க சிபிஐ நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.