

சென்னையில் இன்று காலையில் மழை இல்லாத நிலையில், நண்பகல் 12 மணிக்கு மேல் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. 5,6,7 தேதிகளில் கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, ஜன.04 நள்ளிரவு முதலே சென்னையின் பல இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்தது. கிழக்கு திசை காற்றின் வேகம் அதிகரித்திருப்பதன் காரணமாக, சென்னையிலிருந்து புதுச்சேரி வரை கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.
இந்நிலையில், அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 7 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று தெரிவித்தார்.
சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய 7 மாவட்டங்களிலும், புதுவையிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, நீலகிரி, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டது. நேற்று சென்னையில் பெய்த மழை அளவு நூறாண்டு காலத்தில் இல்லாத மழை அளவு எனப் பதிவிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக, செங்கல்பட்டு 21 செ.மீ., தாம்பரம் 16 செ.மீ., சென்னை எம்ஜிஆர் நகர் 15 செ.மீ., சோழிங்கநல்லூர் 14 செ.மீ., திருவள்ளூரில் 11 செ.மீ. பதிவானது.
மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 11 மணி வரை லேசாக வெயில் அடித்துவந்தது. நண்பகல் 12 மணிக்கு மேல் சென்னையில் மீண்டும் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சென்னையில் பெரும்பாலும் அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது.