Last Updated : 06 Jan, 2021 12:26 PM

 

Published : 06 Jan 2021 12:26 PM
Last Updated : 06 Jan 2021 12:26 PM

கோவை அருகே ஒரே உள்ளாட்சியுடன் இணைக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் 

கோவை அருகே, 4 உள்ளாட்சிகளின் கீழ் வரும் கிராமத்தை, ஒரே உள்ளாட்சியுடன் இணைக்க வலியுறுத்தி, பொதுமக்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே, பொன்னாண்டாம்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்துக்குட்பட்ட பகுதி 4 உள்ளாட்சி அமைப்புகள், 2 சட்டப்பேரவை தொகுதிகள், 2 மக்களவை தொகுதிகளுக்கு உட்பட்டதாகவும் அமைந்துள்ளது.

அதாவது, இந்த கிராமத்தின் குறிப்பிட்ட பகுதி அவிநாசி சட்டப்பேரவைத் தொகுதியிலும், நீலகிரி மக்களவை தொகுதியிலும் வருகிறது. மீதம் உள்ள இடங்கள் சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியிலும், கோவை மக்களவைத் தொகுதியிலும் வருகிறது. அதேபோல், கிராமத்தின் கிழக்குப்பகுதி கணியூர் ஊராட்சியிலும், தெற்குப்பகுதி அரசூர் ஊராட்சியிலும், வடக்குப்பகுதி மோப்பிரிபாளையம் பேரூராட்சியிலும், மேற்குப்பகுதி அன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட நாரணாபுரம் ஊராட்சியிலும் அமைந்துள்ளது.

நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் சிக்கல்

ஒரு கிராமம் பல்வேறு உள்ளாட்சி சட்டப்பேரவை, மக்களவைத் தொகுதிகளின் கீழ் வருவதால், அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இடையூறுகள் ஏற்படுவதாகவும், இதனால் தேவைற்ற அலைச்சல்கள் ஏற்படுவதாகவும், அடிப்படை வசதிகள் கிடைப்பதில் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், அத்தியாவசியமான ரேஷன் கார்டு, ஆதார் அட்டை பெறுவதிலம், பாஸ்போர்ட் பெறுவதிலும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

உண்ணாவிரதப் போராட்டம்

மேலும், பொன்னாண்டம்பாளையம் கிராமத்தை கணியூர் ஊராட்சியில் இணைப்பது என கடந்த 2015-ம் ஆண்டு பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை அமல்படுத்தப்படாமல் கோப்புகள் நிலுவையில் உள்ளன. எல்லைப்பிரச்சினையால், அரசு அலுவலகங்களுக்கு மாறி மாறறி மக்கள் அலைய வேண்டியுள்ளது.

இதுபோன்ற இடர்பாடுகளை தவிர்க்க, மேற்கண்ட கிராமத்தை ஏதாவது ஒரு உள்ளாட்சியில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தரப்பில் நீண்ட நாட்களாக மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால், ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மேற்கண்ட பொன்னாண்டம்பாளையம் கிராம மக்கள் கடந்த 1-ம் தேதி புத்தாண்டை புறக்கணித்து, தங்களது வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். அதைத் தொடர்ந்து, 2-வது கட்டமாக இன்று (ஜன. 6) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்காக மேற்கண்ட கிராம மக்கள், அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே இன்று காலை திரண்டனர். காலவரையற்ற. உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது தங்களது கோரிக்கை தொடர்பான கோஷங்களை எழுப்பினர். கோரிக்கைகள் தொடர்பான விளம்பரப் பதாகைகளையும் கையில் வைத்து இருந்தனர். இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது,"எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x