

வாங்காத பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்கிவிட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளதாக தஞ்சாவூர் நகர்மன்ற முன்னாள் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சாவூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் சி.இறைவன்(82). நகர்மன்ற முன்னாள் தலைவரான இவர், திமுகவில் தலைமைக் கழக சட்ட திட்ட திருத்தக்குழு உறுப்பினராக உள்ளார். இவர் முன்பு சர்க்கரை பெறும்
ரேஷன் கார்டு வைத்திருந்தார். சர்க்கரை ரேஷன் கார்டுகளை அரிசி வாங்கும் ரேஷன் கார்டுகளாக மாற்றிக்கொள்ள லாம் என தமிழக அரசு அறிவித்ததால், இறைவனும் தனது ரேஷன் கார்டை அரிசி வாங்கும் ரேஷன் கார்டாக மாற்றிக் கொண்டார்.
ஜனவரி 10ம் தேதி டோக்கன்
இதனிடையே, தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற, இவரது வீட்டுக்கு கடந்த வாரம் ரேஷன் பணியாளர்கள் டோக்கன் வழங்கினர். அதில், பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ள ஜன.10 என தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பும், ரூ.2,500 ரொக்கமும் பெற்றதாக இறைவனின் செல்போனுக்கு நேற்று முன்தினம் மாலை குறுஞ்செய்தி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இறைவன், வட்ட வழங்கல் அலுவலரிடம் புகார் செய்தார்.
இதுபற்றி இறைவன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எனக்குரிய ரேஷன் கடை முனிசிபல் காலனியில் உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்புக் கான டோக்கன் என்னிடம் இருக்கும்போது, நான் வாங்கி விட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. எனது பணத்தை யாரோ எடுத்துவிட்டு முறைகேடு செய்துள்ளனர். விவரம் தெரிந்த எனக்கே இதுபோல நடைபெற்றுள்ள நிலையில், படிக்காத பலருக்குரிய
பொங்கல் பரிசுத் தொகுப்பை அதிகாரிகளும், ஆளுங்கட்சியி னரும் முறைகேடு செய்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரி விளக்கம்
இதுகுறித்து தஞ்சாவூர் வட்ட வழங்கல் அலுவலர் சமத்துவராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
இது தொடர்பாக இறைவன் என்னிடம் புகார் செய்ததும், நான் கடையில் சோதனை செய்தேன். அப்போது, அவரது கார்டுக்கு இன்னும் பொங்கல் பரிசு தொகுப்பு கொடுக்கவில்லை என தெரிந்தது. எனவே, அவரது செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி தவறுதலாக சென்றிருக்கலாம் என்றார்.