

அரபிக் கடலில் லட்சத் தீவுகள் அருகே காற்று மேல் அடுக்கு சுழற்சி உருவாகியிருப்பதால் தென் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
ஜூன் மாதம் தொடங்கிய தென் மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் இதுவரை 273.3 மி.மீ. மழை பெய்துள்ளது. வழக்கமான மழை அளவை விட இந்த ஆண்டு இதுவரை 13 சதவீதம் குறைவாக பெய்துள்ளது. தென்மேற்கு பருவமழை முடிவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அரபிக் கடலில் லட்சத் தீவுகள் அருகே காற்று மேல் அடுக்கு சுழற்சி உருவாகி யுள்ளது. இதனால் தென் தமிழகத் தில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்துள்ளது. எனவே மேலும் 2 நாட்களுக்கு கன மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்கு நர் எஸ்.ஆர்.ரமணன் கூறும்போது, “பருவமழை முடியும் தருவாயில் இருந்தாலும் தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு கன மழை பெய்யும். வட கிழக்கு பருவ மழை தொடங்கும் தேதி குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் அளிக்கவில்லை” என்றார்.
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் 12 செ.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் 11 செ.மீ., ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் 9 செ.மீ., திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் உள்ளிட்ட இடங்களில் 7 செ.மீ. மழை நேற்று முன் தினம் பெய்துள்ளது. மேலும் மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, தஞ்சாவூர், சேலம், கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை என பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.